பழநி முருகன் கோயிலில் திருக்கல்யாண கோலாகலம்

பழநி: பழநி முருகன் கோயிலில் நடந்த வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நேற்றிரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் வள்ளி  தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தையொட்டி வள்ளி  தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு, 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.

Advertising
Advertising

தொடர்ந்து பக்தர்கள் ‘அரோகரா, அரோகரா’ என முழங்க, கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மங்கல நாண் அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயிலில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேரேற்ற நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து 31ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: