குயவர் அளித்த குன்றாக்கொடை

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

சோழநாட்டுத் தேவார தலங்கள் வரிசையில் மூன்று திருக்கோயில்களில் மட்டும் அந்தந்த கோயில் வளாகங்களில் இரண்டிரண்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் என ஆறு தலங்கள் உள்ளன. ஆரூர் எனப்பெறும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் வளாகத்தினுள் பூங்கோயில் (கமலாயம்) எனப்பெறும் புற்றிடங்கொண்டார் கோயிலும், இரண்டாம் திருச்சுற்றில் மேற்கு நோக்கியவாறு ஆரூர் அரநெறி (அசலேசம்) எனும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற சிவாலயமும்  அமைந்துள்ளன.

இது போன்றே புனல் சூழ்ந்த (அகழி) திருப்புகலூர் திருக்கோயிலின் வளாகத்தினுள்ளே மூலவர் கோயிலாம் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் என்ற பாடல் பெற்ற தலமும், மூலட்டானத்தின் வலப்புறம் திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்ற பாடல்பெற்ற திருக்கோயிலும் உள்ளன. மூலவர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடும்போது, ‘‘புள் எலாம் சென்று சேரும் பூம்புகலூரை பாடுமின் புலவீர்காள்’’, என்றும் ‘‘பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின் புலவீர்காள்’’ என்றும் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் சோழநாட்டுத் திருப்புள்ள மங்கையில் ‘‘பொத்தின் அடை ஆந்தை பல பாடும் புளமங்கை அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே’’ என்பார். பாண்டியநாட்டு தேவாரத் தலமான திருப்புணவாயிலில் ‘‘பத்தர் தம் பலர் பாடி நின்று ஆடும் பழம்பதி பொத்தில் ஆந்தைகள் பாட்டுஅறாப் புணவாயிலே’’ என்று சுந்தரன் மீண்டும் கூறியுள்ளார்.

ஆந்தைகள் பாடுவதாகப் போற்றும் மரபு புனிதமானதாகும். வடபுலத்தார் திருமகளின் வாகனமாக ஆந்தையை மங்கலமுடையதாகப் போற்றுவர். கோயில் கோபுரங்களில் வாழும் ஆந்தைகள் சோழநாட்டு நெல் வளத்திற்கு (எலிகளை அழிப்பதற்கு) அடிப்படை காரணமானவை என்பதை நாம் உணர்தல் வேண்டும். திருப்புகலூர் வர்தமானீச்சரம் திருமுருகநாயனாரால் பூசிக்கப்பெற்ற சிறப்புடையது. அதனால்தான் திருஞானசம்பந்தர் ‘‘மூசுவண்டு அறை கொன்றை முருகன் முப்பேதும் செய் முடிமேல் வாசமாமலர் உடையார் வர்த்த மானீச்சரத்தாரே’’ என்று அங்கு பாடிய பதிகப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இரு பாடல் பெற்ற தலங்களுடைய மூன்றாம் திருக்கோயில் திருமீயச்சூர் என்பதாகும். இங்கு சம்பந்தரால் பாடல் பெற்ற மீயச்சூர் கோயிலும் அதன் அருகிலேயே அதற்கு இணையாக அப்பரால் பாடப்பெற்ற மீயச்சூர் இளங்கோயிலும் உள்ளன. திருஞானக் குழந்தையார் தம் பாடலில் அன்று மாயமாக வந்து நின்ற சூரபத்மன் தலையை அறுத்த முருகப் பெருமானின் தந்தையாகிய சிவபெருமான் உறையும் கோயிலைத் தொழுதால் நம் வினை அறுமே என்ற பொருள்பட,

‘‘மாயச்சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை தன்

மீயச்சூரைத் தொழுது வினை வீட்டுமே’’

என்று குறிப்பிட்டுள்ளார். இத்தலத்தில் பதிகம் பாடிய திருநாவுக்கரசு பெருமானார், ‘‘தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில்கள் பல உள மீயச்சூர்’’ என்று முதற்பாடலிலேயே குறிப்பிட்டு முன்பே தோற்றுவிக்கப் பெற்று அங்கு திகழ்ந்த கோயிலையும் அவர் அங்கு சென்றபோது தோற்றம் பெற்றுக் கொண்டிருந்த கோயிலையும் குறிப்பிட்டுள்ளார். அந்த தோற்றும் கோயில்தான் மீயச்சூர் இளங்கோயில். இதனை பாலாலயம் என்று குறிப்பிடுவர்.

இங்கு குறிப்பிடப்பெறும் மூன்று இரட்டை இரட்டைப் பதிகக் கோயில்களில் புகலூரும், மீயச்சூரும் வேளாக்குறிச்சி ஆதினத்தாலும், ஆரூர் தருமை ஆதினம் மற்றும் வேளாக்குறிச்சி ஆதினத்தாலும் அருளாட்சி செய்யப் பெறுகின்ற கோயில்கள் என்பதால் அங்கெல்லாம் தூய்மையும் தெய்வீக மணமும் கமழ்வதோடு நம்மை ஈர்க்கும் அருளணுபூதியையும் நாம் பெறமுடிகின்றது.

அது மனத்திற்கு நிறைவை அளிக்கும்.திருமீயச்சூர் - மீயச்சூர் இளங்கோயில் எனும் இப்பெருங்கோயில் உள்ள திருவூர் திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலுள்ள பேரளம் கடைவீதியிலிருந்து மேற்காகப் பிரியும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. குடந்தை, காரைக்கால் நெடுஞ்சாலையில் செல்வோர் கொல்லுமாங்குடி எனும் ஊரில் சந்திக்கும் ஆரூர் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று பேரளத்தை அடையலாம். மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் தடத்தில் பேரளம் ரயில் நிலையம் உள்ளது. தற்காலத்தில் லலிதாம்பிகை கோயில் என்று கூறினால்தான் மீயச்சூர் செல்ல பலரும் வழிகாட்டுவர்.

திருமீயச்சூர் எனும் ஊரின் நடுவண் திகழும் இச்சிவாலயம் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கின்றது. திருக்கோபுரம் கடந்து இரண்டாம் கோபுரத்திற்கு முன்பு துவஜஸ்தம்பம், பலிபீடம், ரிஷபக்கொட்டில் ஆகியவை அமைந்துள்ளன. வலப்புறம் திருக்காமகோட்டமாகிய தேவியின் திருக்கோயிலும் இடப்புறம் விஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளன. இரண்டாம் கோபுரம் கடந்து உள்ளே சென்றால் திருச்சுற்று மாளிகையுடன் திருமீயச்சூருடையார் கோயில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றுடன் காணப்பெறுகின்றது. மூலவரின் ஸ்ரீவிமானம் தூங்கானை மாடம் எனப்பெறும் கஜபிரிஷ்ட விமானமாகத் திகழ்கின்றது. மூலவரான லிங்கப் பெருமானின் திருநாமங்களாக மேகநாத சுவாமி என்றும் மிகிரா அருணேஸ்வரர் என்றும் அழைக்கப்பெறுகின்றனர். இம்மூலவரின் அம்பாள் சந்நதி நாம் நுழையும்போது வலப்புறம் கண்ட ஸ்ரீலலிதாம்பிகை எனப்பெறும் சாந்தநாயகி அம்மை திருக்கோயிலாகும்.

மேகநாதப்பெருமானின் கஜபிரிஷ்ட விமானத்தின் வடபுறம் இணையாக இளங்கோயிலின் ஸ்ரீவிமானமும் முகமண்டபமும் உள்ளன. அப்பர் பெருமானின் பாடல் பெற்ற ஸ்ரீகோயில் இதுதான். இக்கோயிலின் முன்புறம் வடபால் அம்பிகையின் கோயில் உள்ளது. இங்கு இறைவனின் திருநாமம் சகல புவனேஸ்வரர் என்றும் தேவியின் திருநாமம் மேகலாம்பிகை என்றும் குறிக்கப்பெறுகின்றனர். அருகே சண்டீஸ்வரர் திருக்கோயிலும் திருமாளிகைப் பத்தியில் சிவலிங்கங்கள், அடியார்கள், கணபதி, முருகன், சூரியன், பைரவர் போன்ற பரிவாராலயங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. ஈசானத்திக்கில் அருணாசலேஸ்வரர்க்கென்று தனித்த ஆலயம் உள்ளது.

மேகநாத சுவாமியின் கஜபிரிஷ்ட விமான கோஷ்டங்களிலும் இளங்கோயில் கோஷ்டங்களிலும் கணபதி, ஆலமர்ச்செல்வர், பிரம்மன் திருமாலுடன் அண்ணாமலையார், பிரம்மா, சந்திரசேகரர், திருமால், ரி­பாந்திகர், கங்காவிசர்ஜனர் போன்ற தெய்வத் திருமேனிகளின் கற்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கோஷ்டங்களின் மேற்புறம் உள்ள மகர தோரண சிற்பக்காட்சிகள் சோழர் கலையின் உன்னதத்தை எடுத்துக்காட்டுபவையாகும். கோஷ்டமூர்த்தியான கங்கா விசர்ஜன மூர்த்தி ஒருபுறம் தவக்கோலத்தில் நிற்கும் பகீரதனுடனும், ஒருபுறம் பெருமான் தாடையை வருட நாணத்துடன் நிற்கும் உமையவளுடனும் காணப்பெறுகின்றார்.

அம்மையைத் தழுவி நிற்பவர் தன் விரிசடையில் முடிந்திருந்த கங்கை எனும் நங்கையை தன் இருவிரல்களால் எடுத்து பகீரதனுக்காக பூமியில் விட எத்தனிக்கின்றார். சடையில் காணப்பெறும் கங்காதேவியின் சிற்ப அழகோ பேரழகாகும். பெருமானின் கருணை முகமும் தேவியின் நாணத்தோற்றமும் ஏட்டில் வடிக்க இயலா சிறப்புடையவையாகும். பிரம்மா நின்றருளும் கோஷ்டத்திற்கு மேலே காணப்பெறும் மகர தோரணத்தில் திகழும் நரசிம்மரின் ஹிரண்யவத காட்சி சோழர் சிற்பக்கலையின் உச்சத்தைத் தொட்ட படைப்பாகும். நரசிம்மர் பத்துக் கரங்களுடன் திகழ்கின்றார்.

வலக்காலால் நின்றுகொண்டு இடக்காலைத் தூக்கி தன்னுடன் போரிட முயன்ற இரண்யகசிபின் கேடயம் பிடித்த இடக்கரத்தையும் வலக்காலையும் கிடுக்கிப்பிடியாக அழுத்தியுள்ளார். இரண்யனின் நீட்டியுள்ள இடக்காலை பெருமான் தன் வலக்கரம் ஒன்றால் இழுத்து அழுத்திப் பிடித்துள்ளார். அதேசமயம் அவர்தம் இடக்கரம் ஒன்று அவன் முண்டி எழாதவாறு அவன் சிகையைப் பற்றி இழுத்து நிற்கின்றது. இடப்பின்கரம் ஒன்று விஸ்மயம் (பேரதிசய முத்திரை) காட்ட மற்ற கரங்களில் சங்கு சக்கரம் உட்பட்ட திருமாலின் ஆயுதங்கள் உள்ளன.

நரசிம்மர் தன் முன்னிரு கரங்கள் கொண்டு இரணியனின் மார்பினைப் பிளக்கின்றார். அப்போது கோபாவேசத்துடன் வாய்பிளந்து கர்ஜிக்கும் அந்த சிம்ம முகத்தினை இனி எந்த ஒரு சிற்பியாலும் இத்தனை தத்ரூபமாகக் காட்ட இயலாது. பெருமானின் காலருகே இரணியனின் தேவி அமர்ந்தவாறு செம்மாந்த பெருமானின் திருக்கோலத்தை கண்டு தலைக்குமேல் இருகரம்கூப்பி தொழுகின்றார். எதிர்புறம் வாளும் கேடயமும் தாங்கிய அரக்கன் ஒருவன் பயந்து ஒதுங்கி ஓட முயல்கின்றான். அவனுக்கு மேலாக பிரகலாதன் உருவம் உள்ளது.

இந்த மகர தோரணத்தை போன்றே அங்கு கோஷ்டங்களில் திகழும் மகாலட்சுமி, சிம்மத்துடன் நிற்கும் கொற்றவை, தேவியுடன் அமர்ந்துள்ள சிவபெருமான், சண்டீசருக்கு தலையில் மாலை சூட்டும் காட்சி போன்ற பல உள்ளங்கவர் சிற்பக்காட்சிகள் இவ்வாலயத்தின் பொக்கிஷங்களாக விளங்குகின்றன. இங்குள்ள ஆதி சண்டீஸ்வரர் நான்கு தலைகளுடன் திரிசூலம், மழு, அக்கமாலை, ஜலகெண்டி ஏந்தி அமர்ந்தாராக காணப்பெறுகின்றார்.

இவ்வாலயத்தில் முற்கால சோழர் காலம் முதல் பாண்டியர் ஆட்சிக்காலம் வரை பொறிக்கப்பெற்ற பல கல்வெட்டுக்கள் காணப்பெறுகின்றன. சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டில் ‘‘உய்யக்கொண்டார் வளநாட்டு திருமீகைச்சூர் உடையார் திருமீகைச்சூருடைய நாயனார் திருக்காமகோட்டமுடைய சிவகாம சுந்தரி நாச்சியார்’’ என்ற வாசகம் காணப்பெறுகின்றது. லலிதாம்பிகை என்றும் சாந்த நாயகி என்றும் அழைக்கப்பெறும் இத்தேவியின் பண்டைய  திருநாமம் ‘‘திருக்காம கோட்டமுடைய சிவகாம சுந்தரி நாச்சியார்’’ என்பதாகும்.

சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழும் இக்காமகோட்டத்து லலிதாம்பிகை ஒரு காலை மடக்கி ஒருகாலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் இரு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றாள். அத்தேவியின் கால்களில் கொலுசுகள் பூட்டுவது இங்கு மேற்கொள்ளப்பெறும் வழிபாட்டு நெறியாகும்.

மிகிராருணேஸ்வரர் என அழைக்கப்பெறும் மேகநாதரின் தேவியான சாந்தநாயகி (லலிதாம்பிகை) அம்மையின் கோயில் தூண்களிலிருந்தும், சுவாமி சந்நதி மண்டபச் சுவர்களிலிருந்து பல கல்வெட்டுக்களைப் பதிவு செய்துள்ளனர். கல்வெட்டுக்கள் இறைவனை மூலஸ்தானமுடைய மகாதேவர், திருமீயச்சூருடைய மகாதேவர், திருமீயச்சூருடையார் எனப் பல பெயர்களில் குறிப்பிடுகின்றன.

வீரராஜேந்திர பேராறு, பாண்டி குலபதி பேராறு, செம்பியன்மாதேவி மயக்கல், இறைவான்சேரி (எரவாஞ்சேரி) என பல இடங்கள் பற்றிய குறிப்புகள் உள. மண்பாண்டம் செய்யும் குயவர்களை (குலாலர்) சோழர்கல்வெட்டுக்கள் வேட்கோவர் எனக் குறிப்பிடுகின்றன. அவர்கள் கோயில் இசைக்கருவிகளை இசைப்பவர்களாகவும், கோயில் அறங்கூர் அவயத்து  தலைவர்களாகவும் (நீதிபதிகளாகவும்) நிலவுடைமைபெற்று பல அறக்கொடைகளைச் செய்தவர்களாகவும் விளங்கியுள்ளனர்.

பராந்தக சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி 916இல்) திருமீயச்சூர் இறைவன் முன்பு இரண்டு நந்தா விளக்குகள் எரிப்பதற்காக சந்திரன் சூரியன் உள்ளளவும் செல்லுபடியாகுமாறு செம்பியன் மாதேவி மயக்கல் என்ற பெயரில் இருந்த ஒன்பது மா அரைக்காணி நிலத்தை வேட்கோவன் புகழன் முன்னூற்றுவன் என்பார் ஊர்ச் சபையிலிருந்து விலைக்கு வாங்கி கோயிலுக்கு அளித்துள்ளார்.

அந்த குயவரின் அறக்கொடையை சோழப் பேரரசன் கல்லில் பதித்து பெருமை சேர்த்துள்ள மான்பு பெருமைக்குரியதாகும். திருவாரூரில் உள்ள  திருநீலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குயவர்கள் ஒன்று சேர்ந்து ஐந்து வேலி நிலம் அளித்த அரிய செப்பேடு ஒன்று ஆரூர் கோயிலில் உள்ளது. குலாலர் மரபில் உதித்த திருநீலகண்ட குயவனாரின் பெருமையை அந்தணரான சுந்தரர் ‘‘திருநீல கண்டத்து குயவனார்க்கு அடியேன்’’ என்று திருத்தொண்டத்தொகையில் குறிப்பிட்டுள்ளார். குலாலர் தம் பெருமையை திருமீயச்சூர் கல்வெட்டில் கண்டு நம் மரபின் பெருமையை தெளிவுற அறியலாம்.

8. ராஜஸ்தான் - கும்பல்கர்க் கோட்டை கட்டளைக் கல்லாலான திருநீலகண்டரின் லிங்கத் திருமேனி

அதென்ன கட்டளைக் கல். வேறொன்றுமில்லை. பொன் உரசும் கல்தான் கட்டளைக்கல். சங்க இலக்கியங்களில் திருக்குறள் உட்பட பல நூல்களில் இந்தச் சொல் வந்து கொண்டேயிருக்கின்றது. உரைகல் என்பது தங்கம் வெள்ளி போன்ற அரிய உலோகங்களை உரைத்து அதாவது உரசி  (தேய்த்து) மாற்று(தரம்) பார்த்து அவற்றின் தரத்தை அறிய உதவும் கல் ஆகும்.

‘’ பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்’’

மணக்குடவர் இதற்குப் படிக்கல் எனப் பொருள் கூறினார். காலிங்கர் தகுதிமாற்று அறியும் கருவியாகிய உரைகல்லும் நிறை தூக்கிய கட்டளைக் கல்லும்’ அதாவது தராசு பிடித்துப் பார்க்கப் பயன்படும் கல் போன்றதும் ஆகும், என்றார். படிக்கல் நிறையறியும் கல்; உரைகல் மாற்று அறியும் கல். இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு. ‘காலிங்கர் இருவகைக் கல்லையும் கொள்வதன் நோக்கம், தீச் செயல்களைக் கொண்டு குற்றங்களை அளந்து காணும்போது நிறைகல்லையும் நற்செயல்களைக் கொண்டு தரத்தை வரையறுக்கும்போது உரைகல்லையும் நாம் கொள்ள அமைத்தனர் எனலாம். ‘கட்டளைக்கல் - எல்லை வரையறுத்துக் காட்டுங் கல் என்றுங் கொள்ளலாம்’ எனச்

சொல்வார் வை. மு. பாலகிருஷ்ணமாச்சார்யார்.

‘‘ சால்பிற்குக் கட்டளை யாதெனின், தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் ’’ - (சான்றாண்மை [986 ] அதாவது, சால்பாகிய பொன்னின் அளவு அறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின், தோல்வியைத் தம்மினும் தாழ்ந்தாரிடமும் கொள்ளுதலே ஆகும். இவ்வாறாக ‘கட்டளைக் கல்’ என்பதற்கு இலக்கியங்கள் இவ்வளவு உரைகளை எடுத்து இயம்புகின்றன.

இந்த கட்டளைக்கல்லால் ஆன ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத் திருமேனி, கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) வளாகத்தில், அருள்மிகு நீலகண்டர் திருக்கோயிலில் உள்ளது. சிவப் பரம்பொருளின் கருணையின் திரு வடிவமாக விளங்குகின்ற நஞ்சுண்ட அவரின் திருநீலகண்டத்தின் நிறம் போலவே அடர் நீலநிறக் கல்லால் அமைந்த சிவலிங்கத்திருமேனி இது. பீடம், ஆவுடையார்,பாணம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரே கட்டளைக் கல்லால் அமைக்கப்பட்ட ஆறு அடி உயரத் திருமேனி இது.

பொது யுகமான 1458 ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் நான்கு புறமும் இறைவனைக் காணும் வகையில் கட்டப்பட்ட சர்வதோபத்ர கோயிலாகும். நீலகண்டர் திருக்கோயில் தவிர, கும்பல்கர்க் கோட்டையில் வேதி கோயில் [ Vedi temple ], பரசுராம் கோயில் [Parshuram Temple ], ரணக்பூர் ஜெயின் கோயில் [Ranakpur Jain temple], மம்மதேவ் கோயில் [ Mammadev temple ] ஆகிய கோயில்களும் உள்ளன .

வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆன்மிக தாகம் கொண்டோருக்கும் இத்தலம் அற்புத அனுபவத்தைத் தரும். கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் மலைக்கோட்டைகளுள் ஒன்றாகும். பதினைந்தாம் நூற்றாண்டில் இராணா கும்பா என்ற மேவார் மன்னர் கட்டிய இக்கோட்டை உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. உலகின் மிக நீளமான சுவர்களில் இரண்டாவதான இதனை உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.

ராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது. கும்பல்கர் கோட்டை பதிமூன்று சிகரங்களாலும், காவல் கோபுரங்களாலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் முப்பத்தாறு கிலோ மீட்டர் தூரம் நீண்டு செல்கிறது.

கனத்த கருங்கற்களால் ஆன கோட்டை இது. கோட்டைச்சுவர் பதினைந்து அடி தடிமன் கொண்டது. நாற்பதடி உயரம். அதன் முகப்பில் பிரமாண்டமான நீர்த்தாழிகளை வரிசையாக வைத்ததுபோல வளைவு. இதன் நீளமும், வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிட பாணியும் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தக் கோட்டையின் சுவர், சீனப் பெருஞ்சுவருக்கு பிறகு உலகின் மிக நீளமான சுவராகக் கருதப்படுகிறது. மேலும், இந்தக் கோட்டையில் மகாராண பதே சிங் எனும் மன்னரால் கவிகை மாடங்களுடன் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் உள்ளது.

இராணா பிரதாப் சிங் அங்குதான் பிறந்தார். ஆகவே, அது இராஜபுத்திரர்களுக்கு ஒரு புனிதத் தலம்போல விளங்குகின்றது. கும்பல்கர் கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதலே முக்கியமான ஊராக இருந்திருக்கிறது. சமண நூல்களில் சொல்லப்படும் மாமன்னரான சம்பிரதா அந்த ஊரில் ஆயிரம் சமணக்கோயில்களைக் கட்டியதாகக் கல்வெட்டுகள் சொல்கின்றன. பின்னர் அந்நகரம் அழிந்தது. இராணா கும்பா அங்கே நூற்றியெட்டு சமணக் கோயில்களை மீண்டும் கட்டினார். சிவன் காளி விஷ்ணு கோயில்

களையும் கட்டினார்.

கட்டளைக்கல்லால் ஆன நீலகண்டர் திருமேனியை மகாராணா கும்பா அவர்கள் தரிசித்து விட்டுத்தான் தனது அலுவல்களை தொடங்குவாராம். இதில் சுவாரசியமான செய்தி என்னவெனில் ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத் திருமேனியாதலால், சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் தனது கண்கள் லயித்திருக்கும் வகையில் ஆசனம் அமைத்து, அதில் அமர்ந்து தரிசனம் செய்வாராம்.

 மகாராணா கும்பகர்ணா என்ற இராணா கும்பா மேவாரை 1433 முதல் 1468 வரை ஆட்சி செய்தவர் ஆவார். சிசோடிய குலத்தைச் சேர்ந்தவர். ராணாகும்பா ராஜபுத்திர வீரத்துக்கு முதன்மை உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் அல்லாவுதீன் கில்ஜியால் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட பின் மேவார் பலம் குன்றி அதிகார வர்க்கம் சிதறிக்கிடந்த காலத்தில் ராணா கும்பா பதவிக்கு வந்தார். ராஜபுத்திர குலங்களைத்  திரட்டி தனது அரசினை அமைத்து சித்தூர் கோட்டையைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி செய்தார்.

ராணா கும்பா இன்றும்  நினைக்கப்படுவது அவர் கட்டிய ஏராளமான கோட்டைகளுக்காகத்தான். மேவார் நாட்டில் உள்ள 84 கோட்டைகளில் 32 கோட்டைகள் ராணா கும்பா கட்டியவை. அவர் கட்டிய கோட்டைகளில் சித்தூர், கும்பல்கர் இரு கோட்டைகளும் பிரமாண்டமானவை. இந்தியாவின் கோட்டைகளிலேயே அவைதான் முதலிடம் வகிப்பவை. அதில் சித்தூரில் உள்ள கும்பால்கர் கோட்டை, கடல் மட்டத்தில் இருந்து 1914 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்தக் கோட்டை உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ராணா கும்பாவே கோட்டைகளில் பெரும்பாலானவற்றுக்கான பொறியியல் வரைவை அமைத்திருக்கிறார். அவர் ஒரு வாஸ்து நிபுணர். இன்றும் இக்கோட்டைகளுக்கான ஆய்வுகளுகாக உலகம் முழுக்க இருந்து ஆய்வாளர் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ராணா கும்பாவின் ஆட்சியில் இலக்கியம் இசை கட்டிடக்கலை அனைத்தும் வளர்ச்சி அடைந்தது. ராணா கும்பாவின் அரசவையில் அக்காலத்தின் புகழ்மிக்க கவிஞர்களும், இலக்கண ஆசிரியர்களும் இருந்திருக்கிறார்கள். ராணா கும்பா ஒரு பேரிலக்கியவாதி. அவர் ஜெயதேவரின் கீத கோவிந்தத்துக்கு உரை எழுதியிருக்கிறார். அது இரசிகப் பிரியா உரை என அழைக்கப்படுகிறது. ராணா கும்பா எழுதிய சுதாபிரபந்தா, காமராஜ ரதிசாரா போன்ற நூல்கள் முக்கியமானவையாக சொல்லப்படுகின்றன. இசை சம்பந்தமான இரு நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.

கும்பல்கர்க் கோட்டையினைக் கட்ட மகாராணா கும்பகர்ணா கடும் முயற்சிகளை பலமுறை மேற்கொண்டும்  அவையனைத்தும்  தோல்வியுற்றன. தியாக மனம்மிக்க  ஒருவர் தன் தலையைத் தானே வெட்டி பலியானால் மட்டுமே இக்கோட்டையை கட்டுவதை தெய்வங்கள் அனுமதிக்கும் என்று ஆரூடம் சொல்லப்பட்டது. மேலும், அவ்வாறு நரபலி கொடுக்கப்படும் நபரின் தலை விழும் இடத்தில் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்றும், அந்த நபரது உடல் விழும் பக்கத்தில் கோட்டையும், கோட்டைச் சுவரும் கட்டப்பட வேண்டுமென்றும் ஆரூடம் சொல்லப்பட்டது.  அதைப்போலவே  ஒரு வீரன் தன் கழுத்தைத் தானே வெட்டிக் களப்பலியானான்.

[நவகண்டவீரன் என்று சொல்வார்கள்] அந்தத் தியாகத்தைப் போற்றும் விதமாகவும் அந்த கோட்டையின் பிரதான வாசலான ஹனுமான் போல் எனும் இடத்திற்கு அருகே நினைவுக் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தீப ஸ்தம்பத்தில் மகாராணா கும்பா பெரும் நெய் விளக்குகளை அமைத்திருந்தார் என்றும், அந்த ஒளியில் விவசாயிகள் வயலில் வேலை செய்வார்கள் என்றும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கும்பல்கர்க் கோட்டையினைச் சுற்றிப் பார்க்க சரியான காலம் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய உள்ள காலமாகும். மழைக் காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாயவித்தை போன்று பசுமை போர்த்து, ஆரவல்லி மலைத்தொடர் அற்புதமாகக் காட்சியளிக்கும். அந்தச் சமயத்தில் கும்பல்கர்க் கோட்டையும் பசுமை போர்த்திக் கொண்டு கண்ணுக்கு அழகாக விருந்தளிக்கும். காலநிலையும் அற்புதமாக இருக்கும்.

கும்பல்கர்க் கோட்டை  உதய்பூர் நகரிலிருந்து 84 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உதய்பூர் நகரில் தங்குவதற்கான வசதிகள் ஏராளமாக உள்ளன. நுழைவுக்கட்டணம்- இந்திய பிரஜைக்கு பதினைந்து ருபாய்.அயல் நாட்டவருக்கு இருநூறு ருபாய். ஒளி, ஒலிக் காட்சிஸ்ரீாஆ தினமும் மாலை ஆறரை மணியளவில் நடத்தப்படுகின்றது. இந்தக் கோட்டை காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறுமணி வரை திறந்திருக்கும்.

Related Stories: