அவர் பெயர்தான் ரஜ்னி விமர்சனம்

நண்பர் வீட்டிலிருந்து கிளம்பிய சைஜு க்ரூப், தனது மனைவி நமீதா பிரமோத்துடன் காரில் செல்லும்போது, திடீரென்று கார் நின்றுவிடுகிறது. மனைவியை காரிலேயே உட்கார வைத்துவிட்டு பெட்ரோல் பங்க்கிற்கு செல்லும்போது, ஒரு மர்ம உருவம் கார் மீது ஏறி நின்று, சைஜு க்ரூப்பை கொன்றுவிடுகிறது. அங்கிருந்து நமீதா பிரமோத் தப்பிக்கிறார். அவரையும் கொலை செய்ய மர்ம உருவம் தேடுகிறது. சைஜு க்ரூப்பை கொன்றது யார்? என்ன காரணம் என்று கண்டுபிடிக்க, நமீதா பிரமோத்தின் சகோதரர் காளிதாஸ் ஜெயராம் களத்தில் இறங்குகிறார். மர்ம நபர் யார் என்று கண்டுபிடிக்கும்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.

சைஜு க்ரூப்பின் கொலைக்கு ஒரு திருநங்கை காரணமாக இருக்கிறார். அவருக்கும், சைஜு க்ரூப்புக்கும் என்ன தொடர்பு? நமீதா பிரமோத்தை காளிதாஸ் காப்பாற்றினாரா என்பது மீதி கதை. ஹீரோயிசத்துக்கான காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், காளிதாஸ் ஜெயராமுக்கு பொருத்தமான கேரக்டர் இது. அவரும் இயல்பாக நடித்து, சகோதரியின் கணவரை கொன்றவரை தேடி அலைகிறார். ரெபா மோனிகா ஜானுக்கு அதிக வேலையில்லை. கணவரின் கொலையை பார்த்து அதிர்ச்சி அடையும் நமீதா பிரமோத், திருநங்கையிடம் சிக்கி உயிருக்கு போராடும் காட்சியில் உருக வைக்கிறார்.

படத்தின் உண்மையான ஹீரோ, திருநங்கையாக நடித்துள்ள பிரியங்கா சாய். அவரது கோபமும், ஆக்ரோஷமும் நியாயமானது. ஆனால், பழிவாங்கும் வெறியால் அந்த கேரக்டருக்கு நெகட்டிவ் ஷேட் கிடைக்கிறது. அவர் பெயர்தான் ரஜ்னி. படத்தில் அவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. அஸ்வின் குமார், கருணாகரன், ரமேஷ்கண்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். சைஜு க்ரூப்பின் கொலை எதற்காக நடந்தது என்ற பிளாஷ்பேக், படத்தின் முதுகெலும்பு.

மறைந்த பூ ராமு, திருநங்கை பற்றி விவரிக்கும்போது கண் கலங்குகிறது. தியேட்டரில் ரஜினிகாந்த் பட ரிலீஸ் காட்சிகள், அக்காலத்தை கண்முன் ெகாண்டு வருகிறது. மாறுபட்ட திரைக்கதை அமைத்து வினில் ஸ்காரியா வர்கீஸ் இயக்கியுள்ளார். கிரைம் திரில்லருக்கு ஏற்ப ஆர்.ஆர்.விஷ்ணுவின் கேமரா பயணித்துள்ளது. எடிட்டிங், வசனங்கள், 4 மியூசிக்ஸ் குழுவினரின் பின்னணி இசை நேர்த்தி. போலீஸ் செய்ய வேண்டிய எல்லா வேலையையும் காளிதாஸ் ஜெயராம் செய்வதில் லாஜிக் இடிக்கிறது. யூகிக்க கூடிய காட்சிகள் மைனசாகிவிடுகிறது.

The post அவர் பெயர்தான் ரஜ்னி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: