அன்னபூரணி: விமர்சனம்

ஸ்ரீரங்கம் அக்ரஹாரத்தில் பிறந்த பிராமணப் பெண், ஆம்பூர் பிரியாணி மாஸ்டராக முடியுமா என்ற கேள்விக்கு, ‘முடியும்’ என்று நிரூபிக்கிறார் அன்னபூரணி. இதற்காக அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், சவால்களும்தான் படம். ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் மடப்பள்ளியின் தலைமை சமையல்காரர் ரங்கராஜனின் (அச்யுத் குமார்) மகள் அன்னபூரணி (நயன்தாரா). 13 வயதில் இருந்தே சமையல் மீது அதி மோகம் கொண்ட அவருக்கு சாஸ்திர, சம்பிரதாயங்களை மீறி அசைவ சமையல் வாசனையும் பிடிக்கிறது. அவரது நண்பர் பர்ஹான் (ஜெய்) முஸ்லிம் வீட்டு மகன். அவரது குடும்பத்தின் வழியாக அசைவ சமையல் கலையும் அன்னபூரணிக்கு அறிமுகமாகிறது.

வளர்ந்து ஆளான பிறகு கேட்டரிங் படிக்க ஆசை. ஆனால், அசைவம் சமைத்து, அதை ருசித்துப் பார்க்க வேண்டியிருக்கும் என்பதால், ‘கேட்டரிங் படித்தால் ஆச்சாரம் கெட்டுவிடும்’ என்று தடை விதிக்கிறது குடும்பம். எனவே, வேறுவழியின்றி எம்பிஏ படிப்பதாக பொய் சொல்லிவிட்டு, அதே கல்லூரியில் கேட்டரிங் படிக்கிறார் அன்னபூரணி. இந்த உண்மை குடும்பத்துக்கு தெரியும்போது, அன்னபூரணிக்கு அவசரமாக திருமண ஏற்பாடு செய்கின்றனர். ஆனால், தன் லட்சியத்தை அடைய வீட்டை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்த அன்னபூரணி, கேட்டரிங் துறையில் சாதித்து, செஃப் ஆனாரா என்பது மீதி கதை.

சைவத்தை வாழ்வியலாகக் கொண்ட குடும்பத்தில் இருந்து வரும் பெண், அசைவ சமையலில் சாதிக்கும் இப்படத்தின் மூலமாக, இந்தியாவிலுள்ள ‘உணவு அரசியலை’ மென்மையாக விமர்சித்துள்ளார், இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா. சற்று தடுமாறினாலும் ஒரு சமூகத்தையே புண்படுத்திவிடக்கூடிய கதையை எச்சரிக்கையுடன் கையாண்டு, நடுநிலையுடன் உண்மையைப் பேசியிருக்கிறார். பெருமாள் மணந்த துலுக்கநாச்சியார் இஸ்லாமியப் பெண் என்று ஒருபுறமும், பிரியாணிக்கு ஏது மதம் என்று இன்னொரு புறமும் நின்று நடுநிலை வகித்துள்ளார்.

எல்லா வீடுகளிலும் பெண்கள் சமைக்கும்போது, ஓட்டல் சமையலறைகளில் மட்டும் ஆண்களே நிறைந்திருப்பது ஏன் என்ற பெண்ணுரிமை கேள்வியையும் கேட்டிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு தரமான இயக்குனராக, முதல் படத்திலேயே தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார், நீலேஷ் கிருஷ்ணா. இக்கதையை தேர்வு செய்து நடித்ததற்காக நயன்தாராவைப் பாராட்டலாம். 39 வயதிலும் கல்லூரி மாணவியாக நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். நயன்தாராவை ஒருதலையாய்க் காதலித்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார் ஜெய். ‘பர்ஹானை (ஜெய்) எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்னு கேட்டா, பர்ஹான் மாதிரி வேணும்னு சொல்வேன்.

ஆனா, பர்ஹான்தான் வேணுமான்னு கேட்டா, அதுக்கு பதில் சொல்ல தெரியல’ என்று ஜெய்யுடனான நட்புக்கு புது விளக்கம் தருகிறார், நயன்தாரா. இந்தியாவிலேயே பிரபலமான செஃப் ஆக சத்யராஜ், நயன்தாராவின் தந்தையாக அச்யுத் குமார், அறுசுவை அண்ணாமலையாக கே.எஸ்.ரவிகுமார், நயன்தாராவின் போட்டியாளராக கார்த்திக் குமார் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்துள்ளனர். ரெடின் கிங்ஸ்லி சிரிக்க வைக்க முயற்சிப்பதுடன் சரி. தமன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப இசைத்துள்ளது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

குறிப்பாக, கிளைமாக்ஸ் சமையல் போட்டி காட்சிகள் மாஸ். அன்னபூரணியின் முற்பகுதி கதை உயிரோட்டமாக இருந்தாலும், சென்னைக்கு வந்ததும் சினிமாவின் ரெகுலர் பார்முலாவிற்குள் சிக்கிக்கொள்கிறது. வில்லன் வேண்டும் என்பதற்காகவே, சத்யராஜின் மகன் கார்த்திக் குமார் கேரக்டரை திணித்துள்ளனர். நயன்தாராவுக்கு ஏற்படும் சுவை இழப்பு பிரச்னை பற்றி தெளிவான விளக்கம் இல்லை. பல குறைகள் இருந்தாலும், அதெல்லாம் அன்னபூரணியின் கன்னத்தில் வைத்த திருஷ்டி பொட்டு. ஆக, வழக்கமான சினிமாவில் இருந்து தனித்து நிற்கிறாள் அன்னபூரணி.

The post அன்னபூரணி: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: