பாலகிருஷ்ணன் இயக்கத்தில் திரைப்படமாகும் திருக்குறள்

சென்னை: ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில், ‘காமராஜ்’ என்ற காமராஜர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தயாரித்து இயக்கியவர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். தற்போது திருக்குறளை மையப்படுத்தி படம் இயக்குகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: திருக்குறளை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்பு, தமிழரின் மேன்மையை மேற்கத்திய அறிவுலகம் வியந்து பார்த்தது. ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் ஒரு கடிதத்தில் குறிப்பிட்ட பிறகுதான், மகாத்மா காந்திக்கு திருக்குறள் அறிமுகமானது. ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும்’ என்ற பாரதியாரின் வரிகளை கட்டளையாக ஏற்று திருக்குறளைப் படமாக்க தீர்மானித்தோம். திருவள்ளுவருடன் 2,000 வருடங்களுக்கு முந்தைய தமிழ்நாட்டையும் படத்தில் பதிவு செய்கிறோம்.

மூவரசோடு வேநாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என்ற பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், வீரம்செறிந்த போர்க்களக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. சங்க காலத்தின் 5 நில மாந்தர்களும் கதாபாத்திரங்களாக இடம்பெறுகின்றனர். ‘காமராஜ்’, ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய படங்களை தயாரித்த எங்களுக்கு இப்பணி கிடைத்துள்ளது. அனைத்து மொழிகளிலும் இப்படத்தை சப்-டைட்டிலுடன் உலகம் முழுக்க திரையிடுகிறோம். ‘காமராஜ்’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர் கே.ஜெயராஜ் திருக்குறள் படத்தின் திரைக்கதையை எழுத, நான் இயக்குகிறேன். ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. வரும் தைத்திங்கள் திருவள்ளுவர் தினத்தன்று படப்பிடிப்பு தொடங்குகிறது.

The post பாலகிருஷ்ணன் இயக்கத்தில் திரைப்படமாகும் திருக்குறள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: