தமிழ் கற்கும் நானி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 7ம் தேதி திரைக்கு வரும் படம், ‘ஹாய் நான்னா’. ஷௌர்யுவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர். படம் குறித்து நானி கூறும்போது, ‘அதாவது, ‘நான்னா’ என்றால், தமிழில் ‘அப்பா’ என்று அர்த்தம். ஆனால், படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம். அது லிப்சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாக இருந்தது. படத்தில் பலமுறை ‘நான்னா’ என்ற வார்த்தை வருகிறது. அதுவும் ஒரு காரணம். இப்படம் கண்டிப்பாக எனக்கு அதிக பெருமையைப் பெற்றுத்தரும். காதல் படம்தான்.

ஆனால், பரபரவென்று காட்சிகள் நகரும். இது ஒருமுறை பார்க்கும் படமாக இருக்காது. மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். அம்மா சென்டிமெண்ட் படங்கள் நிறைய வந்துவிட்டன‌. இப்போது அப்பா சென்டிமெண்ட் படங்கள் வர ஆரம்பித்து இருப்பது நல்ல மாற்றம் என்று நினைக்கிறேன். எனக்கு தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். மணிரத்னம், கமல்ஹாசன் படங்களின் தீவிர ரசிகனாகிய நான், தற்போது தமிழில் பேச பயிற்சி பெறுகிறேன். ஆரம்பகாலத்தில் தமிழ் இயக்குனர்களுடன் பணியாற்றினேன். ஆனால், அதை இங்குள்ள மக்கள் தெலுங்கு படமாகவும், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாகவும் பார்க்க ஆரம்பித்தனர்.

‘பாகுபலி’, ‘காந்தாரா’ போன்ற‌ படங்கள் வந்த பிறகுதான் மொழிவாரி நடிகர் என்று பிரிக்க தேவையில்லை. சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால், அது மக்களிடம் சேரும் என்ற விஷயம் புரிந்தது. அதனால்தான் நல்ல கதைக்கு முக்கியத்துவம் தருகிறேன்’ என்றார்.

The post தமிழ் கற்கும் நானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: