காதல் தி கோர்: விமர்சனம்

சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர், டீகோய் என்ற கிராமத்தைச் சேர்ந்த மேத்யூ தேவஸி (மம்மூட்டி). அவர் தனது கட்சி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி ஓமனா (ஜோதிகா), விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ‘என் கணவர் தன்பாலின ஈர்ப்பாளர்’ என்பது. கணவன் மீது வழக்கு தொடர்ந்த ஓமனாவிடம் கேட்கப்படும் கேள்விகள்: 20 வருடங்கள் சகித்துக்கொண்ட நீங்கள், இப்போது வழக்கு தொடர்வது ஏன்?
ஓமனா: இனியும் சகித்துக்கொள்ள முடியாது என்பதால்.
குழந்தை பெற்றுக்கொண்டது எப்படி?

ஓமனா: கேட்டு வாங்கிக்கொண்டேன்.
எத்தனை முறை தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டீர்கள்?
ஓமனா: திருமணம் ஆனதிலிருந்து 4 முறை.
இந்த வழக்கை, அவரை அவதூறாக சித்தரிப்பதற்குத்தானே தொடர்ந்துள்ளீர்கள்?
ஓமனா: இல்லை. அவருக்கு மிகவும் பிடித்த வாழ்க்கையை அவர் வாழ்வதற்கான சுதந்திரத்தை அளிப்பதற்கு. அவர் மீது அவ்வளவு மரியாதையும், அன்பும் வைத்திருக்கிறேன்.

இதுதான் முழு படம். தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி ஏராளமான படங்கள் வந்துள்ளன. ஆனால், இத்தனை நாகரிகமாக, அடிமனதின் ஆழத்திலிருந்து வரும் உணர்வாக எந்தப் படமும் பேசியதில்லை. மம்மூட்டி தன்பாலின ஈடுபாடு காட்டும் ஓட்டுநர் தங்கன் (சுதி கோழிக்கோடு), படத்தின் முக்கிய கேரக்டராக வருகிறார். அவரும், மம்மூட்டியும் 2 காட்சிகளில் யதேச்சையாக சந்திக்கின்றனர். அக்காட்சிகள் லேசான புன்சிரிப்பு மற்றும் வெட்கத்துடன் கடந்துவிடுகின்றன. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடிப்பது என்பது, அபூர்வமான சினிமாவின் ஆச்சரியங்களில் ஒன்று. அதிகம் பேசாமல் சோகமும், கோபமும், வேதனையும் கலந்த முகத்துடன் நடித்துவிட்டுச் செல்கிறார் மம்மூட்டி. ஒரு காட்சியில் மனம் உடைந்து, ‘என்ட தெய்வமே’ என்று ஜோதிகாவின் தோளில் முகம் புதைத்து அழும் காட்சியில், ரசிகர்களின் விழிகளிலும் வழிகிறது கண்ணீர்.

வெடுக்கென்று திரும்பி, படக்கென்று பேசி, தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்திருக்கும் ஜோதிகாவா இது என்று ஆச்சரியப்பட வைக்கும் அவர், படம் முழுக்க ஓமனாவாகவே வாழ்ந்துள்ளார். ‘எல்லா பெண்களுக்கும் திருமணமானால் ஒரு கணவர் கிடைப்பார். எனக்கு ஒரு தந்தை கிடைத்தார்’ என்று, மம்மூட்டியின் தந்தையின் முன்பு அவர் உருகி நிற்கும் காட்சி, பார்த்தவர்களின் கண்களில் பல காலம் நிறைந்திருக்கும். மம்மூட்டியின் மகளாக நடித்துள்ள அனகா மாயா ரவி, அப்பாவை நன்கு புரிந்துகொண்டு, அவருடன் நிற்கும் இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாக இருக்கிறார். இயற்கையின் விநோதமான விளையாட்டுதான் தன்பாலின ஈர்ப்பு. அதை இழிவாக நினைக்காமல் சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மிக நுணுக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இயக்குநர் ஜியோ பேபி சொல்லியிருக்கிறார்.

‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ மூலம் திரும்பிப் பார்க்க வைத்த அவர், இப்படத்தின் மூலம் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளார். மாத்யூ புலிக்கனின் பின்னணி இசையும், சாலு கே.தாமசின் ஒளிப்பதிவும் படத்தை கவிதையாக மாற்றியுள்ளது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற தகவல், பொதுவெளியில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை படம் பதிவு செய்யவில்லை. குடும்பங்கள் அதை இவ்வளவு காலம் அமைதியாக கையாளும் என்பதிலும் நம்பகத்தன்மை குறைவு. எனினும், இது உலகத்தரமான படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

The post காதல் தி கோர்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: