நெப்போலியன் – திரைவிமர்சனம்

ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் மாவீரன் நெப்போலியனின் பயோபிக் கதை. ரைட்லி ஸ்காட் இயக்கத்தில் ஜோக்குவின் ஃபீனிக்ஸ் , வனேசா கிர்பி, தாஹர் ரஹீம் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஆப்பிள் ஸ்டூடியோஸ், ஸ்காட் ஃப்ரீ புரடெக்ஷன்ஸ் உள்ளிட்ட பல தயாரிப்பில் கொலம்பியா பிக்சர்ஸ், வெளியீட்டில் உருவாகியிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம். இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால் பிரிட்டிஷ் ஆளுமைகளை விரட்டியடித்து, அதன் மூலம் 1793 இல் தூலொன் முற்றுகையை சமாளிப்பதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. நெப்போலியனின் தொடர் வெற்றிகளால், அவரது செல்வாக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.

இதற்கிடையில், விதவையான ஜோசஃபின் (வனேசா கிர்பி) உடன் நட்பு ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்குமான திருமண பந்தம், அதில் உள்ள சிக்கல்கள்,இடையில் போர் நெப்போலியனின் வெற்றி என தொடர்ந்து கதை செல்கிறது. கதையின் இறுதியில் நெப்போலியன் ஏன் மாவீரன் எனக் கொண்டாடப்பட்டார், அதன் விபரங்கள் உட்பட இடம்பெறுகிறது. ரைட்லியின் இயக்கத்தில் 1700களின் கால கட்ட இங்கிலாந்து, பிரான்ஸ், போர் காட்சிகள், அத்தனையும் கவித்துவமாகவும், காவியமாகவும் காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜோக்குவினின் நடிப்புத் திறமையை தன்னால் எவ்வளவு வாங்க முடியுமோ வாங்கி படத்தை செதுக்கியிருக்கிறார்.

ஆனாலும் எங்கோ நெப்போலியனின் கிரே ஷேடின் மீதே அதீத கவனம் செலுத்தியுள்ளது போல் உள்ளது. ஜோசப்பின் மீதான அதிகாரத்துவமான காதல், அவரின் தன என்கிற ஆளுமைத் தன்மையை அதிகம் காட்டியிருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக படம் முடியும் தருவாயில் ஏன் நெப்போலியன் மாவீரன் என்பதாற்கான உணர்வுகளை நமக்குள் கடத்தவில்லையோ என்றே தோன்றுகிறது. டாரியஸ் வோல்ஸ்கி ஒளிப்பதிவில் நாம் 1700களின் ஃபிரான்ஸ், இங்கிலாந்து காலகட்டங்களுக்குள் கடத்தப்படுகிறோம். மார்டின் பைப்ஸ் இசையில் ஒரு சில இடங்களில் பின்னணி அருமை, ஆனால் இன்னும் தாக்கத்தை உண்டாக்கும் பின்னணியோ , தீம்களோ கிடைக்கவில்லை.

மொத்தத்தில் நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு என குழந்தைகள், குடும்பமாக பார்க்க இந்தப் படம் அவ்வளவு ஏற்புடையதல்ல, ஆனால் ஜோக்குவின் என்னும் நடிப்பு அரக்கனின் ரசிகர்களுக்கு இந்தப் படம் நல்ல விருந்து.

The post நெப்போலியன் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: