பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சொன்ன விவகாரத்தில் சீனு ராமசாமி, மனீஷா யாதவ் ஒருவர் மீது ஒருவர் சரமாரி குற்றச்சாட்டு

சென்னை: விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தவர், மனீஷா யாதவ். பிறகு அவர் நடிக்கவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா ஹீரோயின்களாக நடித்தனர். இந்தப்படம் பல காரணங்களால் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்தப் படத்தில் நடித்தபோது மனீஷா யாதவ்வுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால்தான் அவர் தமிழ்ப் படவுலகில் இருந்து சில காலம் விலகி இருந்ததாகவும் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.

இதற்கு தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்த சீனு ராமசாமி, ‘இவங்கதான் (மனீஷா யாதவ்) என்னால சினிமாவை விட்டே போயிட்டாங்கன்னு ஒருவர் சொல்றாரு, ‘ஒரு குப்பைக் கதை’ ஆடியோ விழாவில் (மனீஷா யாதவ்) நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க. ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் விரைவில் வரும்’ என்று பதிவிட்டு இருந்தார். அதோடு, மனீஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

அதற்கு தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்த மனீஷா யாதவ், ‘சென்னையில் நடந்த ‘ஒரு குப்பைக் கதை’ இசை வெளியீட்டு விழாவில், மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததை போலவே சீனு ராமசாமிக்கும் நன்றி தெரிவித்தேன். ஆனால், 9 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒருவருடன் மீண்டும் பணியாற்ற என்ன தேவை இருக்கிறது? சீனு ராமசாமி உண்மையைப் பேச வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தற்போது இந்த விவகாரம் குறித்து சீனு ராமசாமி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அது வருமாறு: ‘இடம் பொருள் ஏவல்’ படப் பிடிப்புக்கு வந்த முதல் நாள், ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மனீஷா?, படப்பிடிப்புத்தளத்தில் உதவ வந்த மூத்த நடிகை வடிவுக் கரசியிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே… ஏன்?, விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என்று நானும், அண்ணாமலை பிலிம்ஸ் கணேஷும் கேட்டபோது ஏன் மறுத்தார்?, எனது சம்பளத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாய் நஷ்டஈடு பெற்றாரே…

ஏன்?, மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஓட்டலில் தனது தாயாருடன் தங்கியிருந்த மனீஷாவை, கடைசி ஒருநாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன். அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்காக காத்திருக்கிறேன். தெய்வம் அருள் புரிய வேண்டும். எனினும், உங்களுடன் மீண்டும் பணிபுரிய விரும்பினேன். இவ்வாறு சீனு ராமசாமி கேட்ட இந்த கேள்விகளுக்கு மனீஷா யாதவ் விரைவில் பதிலளிப்பார் என்று தெரிகிறது. சீனு ராமசாமியின் சம்பளத்தில் இருந்து மனீஷா யாதவ் ஏன் ஒரு லட்ச ரூபாய் நஷ்டஈடு பெற்றார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

The post பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சொன்ன விவகாரத்தில் சீனு ராமசாமி, மனீஷா யாதவ் ஒருவர் மீது ஒருவர் சரமாரி குற்றச்சாட்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: