மோசடி வழக்கில் ஆஜராகாததால் நடிகை ஜரீன் கானுக்கு கைது வாரன்ட்: கொல்கத்தா கோர்ட் அதிரடி

கொல்கத்தா: மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை ஜரீன் கானுக்கு எதிராக கைது வாரன்டை பிறப்பித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழில் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் பாலிவுட் நடிகை ஜரீன் கான். கடந்த 2016ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜையில் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜரீன் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து அதிகளவு செலவு செய்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஜரீன் கானால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், அவர் கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் கொல்கத்தாவில் உள்ள நர்கெல்டங்கா காவல் நிலையத்தில், ஜரீன் கானுக்கு எதிராக மோசடி புகார் அளித்தனர்.

போலீசாரும் ஜரீன் கான் மற்றும் அவரது மேலாளருக்கு எதிராக வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கு கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ஜரீன் கானுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜரீன் கானின் மேலாளர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். அதேசமயம் ஜரீன் கான் ஒருமுறை கூட விசாரணை நீதிமன்றத்திற்கு வரவில்லை. ஜாமீன் கோரியும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் ஜரீன் கானுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ஜரீன் கானிடம் கேட்டபோது, ‘எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஒரு துளி கூட உண்மை இல்லை. என் வழக்கறிஞரிடம் பேசிவிட்டு, விவரங்களை தெரிவிக்கிறேன்’ என்றார்.

The post மோசடி வழக்கில் ஆஜராகாததால் நடிகை ஜரீன் கானுக்கு கைது வாரன்ட்: கொல்கத்தா கோர்ட் அதிரடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: