ஜெயிலர் விமர்சனம்

‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைந்துள்ள படம் ‘ஜெயிலர்’. உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று, வசூலில் பல சாதனைகளை புரிந்து வருகிறது. இப்படத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன். மகனாக வசந்த் ரவி. மருமகள் மிர்னா. பேரனாக ரித்விக் நடித்திருக்கிறார்கள். தன்னைப்போலவே தனது மகன் வசந்த் ரவியையும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வளர்த்திருக்கிறார் ரஜினி. வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தும் கும்பலின் தலைவன் விநாயகன்.

சென்னையில் இருக்கும் சிலர் விநாயகனுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். அவர்களை பிடிக்கும் வேலையில் ஈடுபடுகிறார் வசந்த் ரவி. இதனால் விநாயகன் ஆத்திரம் கொள்கிறார். பதிலுக்கு வசந்த் ரவியை பழிவாங்க துடிக்கிறார். திடீரென ஒரு நாள் வசந்த் ரவி காணாமல் போகிறார். போலீஸ் உதவி ஆணையரான வசந்த் ரவி காணாமல் போவதால் காவல்துறையே பதறுகிறது. ரஜினியும் குடும்பத்தினரும் நிலைகுலைந்து போகிறார்கள். காவல்துறை அவரை தேடும் பணியில் ஈடுபடுகிறது. அந்த சமயத்தில் வசந்த் ரவி இறந்துவிட்ட தகவல் ரஜினிக்கு தெரியவருகிறது. வசந்த் ரவி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால் அவர் கொலை செய்யப்பட்ட உண்மை அறிந்து, ரஜினி கொதிக்கிறார்.

போலீஸ் யுனிபார்ம் போடாமலே கொலைகாரர்களை களையெடுக்கும் வேலையில் ஈடுபட முடிவு செய்கிறார். இதன் விளைவுகளை விறுவிறுப்பாக சொல்கிறது ‘ஜெயிலர்’ படம். படம் முழுவதும் தனது தோள்களில் சுமந்து இந்த வயதிலும் தனது தனித்திறனை வெளிப்படுத்தி அசத்துகிறார் ரஜினிகாந்த். தனது வயதுக்கேற்ற கெட்அப், கேரக்டர் என யதார்த்தமான வேடத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினி மிளிர்கிறார். திரையில் ரஜினியை ஸ்மார்ட்டாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர் நெல்சனும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும். தன்னிடம் கோபித்துக்கொண்ட பேரனை சமாதானப்படுத்தி அவனுக்காக யூடியூப்பிற்கு வீடியோ எடுப்பது,

மகனிடம் சிலை கடத்தல் கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி பாசத்தை வெளிப்படுத்துவது, வீட்டில் பூனைக்குட்டியாக இருந்துகொண்டு, வெளியில் ஆக்‌ஷனில் அதகளப்படுத்துவது, மகன் இறந்த செய்தி கேட்டு, ஒரே ஒரு ரியாக்‌ஷனில் ஒட்டுமொத்த எமோஷனையும் கொட்டித் தீர்ப்பது, விநாயகனை நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியில் தனது ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் வெளிப்படுத்துவது என ஒன் மேன் ஆர்மியாக அதிரிபுதிரி ஆட்டம் ஆடியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது ஒவ்வொரு காட்சிக்கும் தியேட்டரில் கைதட்டி பெரியவர்களும் இளைஞர்களும் பெண்களும் குழந்தைகளும் ஆர்ப்பரிக்கிறார்கள். தனது 72 வயதில் குழந்தைகளை ஈர்க்கும் திறனை பெற்றிருப்பது ரஜினி பெற்றுள்ள பெரும் பொக்கிஷமாகும்.

ஸ்டைலாக ஷூ லேஸை மாட்டுவது, கார் கதவை திறந்து பட்டா கத்தியை எடுப்பது, கண்ணாடியை ஸ்டைலாக கையில் பிடித்தபடி நடப்பது, ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பது என படம் முழுக்கவே ரஜினி ஷோதான். ரஜினிக்கு வலு சேர்க்கும் வகையில் படத்தில் வரும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராப் என மூன்று பேரும் முத்தாய்ப்பாய் படத்துக்கு மகுடம் சூட்டுகிறார்கள். அதிலும் சிவராஜ்குமாரின் அந்த கிளைமாக்ஸ் என்ட்ரியில் தியேட்டர் கரவொலியால் அதிர்கிறது. வில்லன் வேடத்தில் வர்மனாக நடித்து வன்மத்தை வௌிப்படுத்தியிருக்கிறார் மலையாள நடிகர் விநாயகன்.

அவர் வரும் காட்சியெல்லாம் மிரட்டல் ரகம். போலீஸ் அதிகாரியாக மிடுக்குத்தனம் காட்டி தனது அமைதியான நடிப்பால் வசந்த் ரவி கவர்கிறார். ரம்யா கிருஷ்ணன், படையப்பாவுக்கு பிறகு ரஜினியுடன் நடித்துள்ள இந்த படத்தில் நீலாம்பரிக்கு எதிரான கேரக்டரில் கனகச்சிதமாக பொருந்துகிறார். யோகி பாபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி, விடிவி. கணேஷ் என காமெடி பட்டாளமே ரசிகர்களை குதுகலிக்க வைக்கிறது. அதிலும் யோகி பாபு அடிக்கும் டைமிங் வசனங்கள் நச் ரகம். இடைவேளைக்கு பிறகுதான் தமன்னா வருகிறார். ஆனால் அவர் வரும் ‘காவாலா’ பாடல் மூலம் இளைஞர்களை கிறங்கடித்து விடுகிறார். படத்தில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் தமன்னா.

அனிருத் இசையில் ‘காவாலா’ பாடலுக்கு தியேட்டரே அல்லோகலப்படுகிறது. அந்த அளவுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று டான்ஸ் ஆடுகிறார்கள். பாடல் முடிந்ததும் ஒன்ஸ்மோர் கேட்கிறார்கள். ‘டைகர் க ஹுக்கும்’ பாடல் அசூர வகையறா. ‘ஜுஜுபி’ பாடல் அட்டகாசம். ‘ரத்தமாரே’ பாடல் இதயத்தை வருடுகிறது. மொத்தமாக இந்த படத்தில் அனிருத் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மரண மாஸ் காட்டியிருக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகளின் தரம் வேறு மாதிரியான பரிணாமத்தை காட்டுகிறது.

நிர்மலின் எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. சூப்பர் சுப்பு, அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் என பாடல் ஆசிரியர்களின் வரிகள் ஒவ்வொன்றும் மனதில் பதிகிறது. சிலை கடத்தல் விவகாரம், தந்தை-மகன் பாசம் என ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் ஏரியாவை கையில் எடுத்து அதில் தனது ஸ்டைலில் காமெடியையும் புகுத்தி அமர்க்களம் செய்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் விதமான முழுநீள பொழுதுபோக்கு படமாக ஜெயித்திருக்கிறது ‘ஜெயிலர்’.

The post ஜெயிலர் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: