இதன்படி 21 முதல் 65வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திட்டம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் தணிக்கை செய்யப்பட்டது. இதில், 14,298 ஆண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ.21.44 கோடி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த திட்டத்துக்கு இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டது. அப்போது, ஆண்கள், பெண்களின் பெயரில் விண்ணப்பம் செய்து இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.
இதுகுறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறும்போது;
மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏழை பெண்களின் நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் பயன்பெறுவதை ஏற்க முடியாது. அவ்வாறு உதவித் தொகையை பெற்றவர்களிடமிருந்து அந்த பணம் திரும்ப வசூலிக்கப்படும். இதற்கு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தகுதியில்லாத 26.34 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 7.97 லட்சம் பெண்கள் 3-வதாக பதிவு செய்து பயனடைந்து வருவது தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1,196 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல, விதிகளை மீறி உச்சவரம்பான 65 வயதுக்கு மேற்பட்ட 2.87 லட்சம் பெண்கள் நிதியுதவி பெற்று வருகின்றனர். இதனால் ரூ.431.7 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மேலும் 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த 1.62 லட்சம் பெண்கள் நிதியுதவி பெற்று வருவது தெரியவந்துள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதால் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post மராட்டிய மாநிலத்தில் 26.34 லட்சம் பேருக்கு மாதாந்திர மகளிர் உதவித்தொகை நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.
