கூடுதல் போனசாக, மற்றவர்களின் மூளையை தனது கட்டுப்பாட்டுக்குள் சில நிமிடங்கள் கொண்டு வர முடியும். ஆபத்தான கேபிள் பதிக்கும் திட்டம் ஒன்றை பல்லாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்துகிறார், வில்லன் விநய் ராய். அந்த கேபிளில் ஏதாவது தவறு ஏற்பட்டு வெடித்தால் ஊரே அழிந்துவிடும். விநய் ராய் கொடுக்கும் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, தங்களது நிலங்களை கேபிள் பதிக்க விற்றுவிடுகின்றனர், வீரனூர் மக்கள். கேபிள் பதிப்பதற்காக வீரனூரிலுள்ள வீரன் கோயிலை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் ஊருக்கு வரும் ஆதி, தன்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு, கிராமத்து குலசாமி வீரன் தொடர்பாக ஒரு கதையை தானே உருவாக்கி, அதன்மூலம் வில்லனை தீர்த்துக்கட்டுகிறார் என்பது கதை. மலையாளத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ படத்தின் சாயல் இருந்தாலும், இப்படத்தின் கதையும், களமும் வேறு. மின்னல் தாக்கியதால் சூப்பர் பவர் பெறும் விஷயம் மட்டும் ஒரேமாதிரி இருக்கிறது. இப்படியொரு அபூர்வ சக்தியை கையில் வைத்திருந்தாலும், ரொம்பவே சிரமப்பட்டுத்தான் வில்லன்களை விரட்டுகிறார் ஆதி. குலசாமி வீரனின் கெட்டப், சாதாரண இளைஞன் கெட்டப் என்று, லோக்கல் சூப்பர் ஹீரோவாக ஆதி கச்சிதமாக நடித்துள்ளார்.
ஆனால், அவர் முயற்சிக்கும் காமெடி மட்டும் பெரிதாக எடுபடவில்லை. காளி வெங்கட், முனீஷ்காந்த் இருவரும் அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கின்றனர். விநய் ராய் வழக்கமான வில்லனாக மிரட்டுகிறார். ஆதி, ஆதிரா ராஜின் காதல் நட்பில் இருந்து காதலாக மாறுவது நாகரீகமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. டூயட், கட்டிப்பிடித்தல் இல்லாத காதல் ரசிக்கும்படி இருக்கிறது. தீபக் டி மேனனின் ஒளிப்பதிவும், ஆதியின் இசையும் கதையை நடத்திச்செல்ல உதவியுள்ளன. படத்தில் சொல்லப்படும் கேபிள் பதிப்பு, மனித உடலில் மின்சாரம் போன்றவை பேண்டசி விஷயமாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை மற்றும் அந்த நம்பிக்கையின் பெயரிலான பொய்களை படம் தெளிவாகப் பேசியிருக்கிறது. ‘உங்கள் பிரச்னையை நீங்களே தீர்த்துக்கொண்டால் கடவுள் தேவைப்படாது’ என்ற அழுத்தமான வசனம் படத்துக்கு வலு சேர்க்கிறது. நம்ப முடியாத கதையைச் சொல்லி, அதில் நம்ப வேண்டிய கருத்தைச் சொன்னாலும் ‘வீரன்’.
The post வீரன் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.