கலெக்டர் அலுவலக சாலையில் 3.5 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்க 40,000 மரக்கன்றுகள் நடும் பணி

*பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் : பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை அருகே மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 3.5 ஏக்கர் பரப்பளவில் 40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கிவைத்தார்.

பெரம்பலூர் நகராட்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை அருகே மியாவாக்கி எனப்படும் குறுங் காடுகளை உருவாக்கிடும் வகையில் 3.5 ஏக்கர் பரப்பளவில் 40,000 மரக் கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று (21ஆம்தேதி) திங்கட்கிழமை காலையிலே தொடங்கி வைத்தார்.

மியாவாக்கி மரம் வளர்ப்பு முறை என்பது ஜப்பானில் வாழ்ந்த, யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தாவரவியலாளரான அகிரா மியாவாக்கி என்பவர் கண்டு பிடித்த முறையாகும். அதனால், இந்த முறை மரம் வளர்ப்புக்கு ‘மியாவாக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இடை வெளி இல்லா அடர்காடு என்ற தத்துவப்படி, ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி, நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில், அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறைக்கு ‘மியாவாக்கி’ என்று பெயர்.

மியாவாக்கி முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படும். 1,000 சதுரஅடி நிலத்தில் 400 மரங்கள் என்ற அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்படும். மியாவாக்கி முறையால் பூமியில் வெப்பம் குறையும், காற்றில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும், பறவைகளுக்கு வாழிடம் உருவாகும், பல்லுயிர்ச் சூழல் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகு சிறப்பு வாய்ந்த “மியாவாக்கி“ முறையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை அருகே சுமார் 3.5 ஏக்கரில் சுமார் 40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை நேற்று பெரம்பலூர் மாவட்டகக் கலெக்டர் கிரேஸ்பச்சாவ் தொடங்கி வைத்தார்.

பின்னர் நடப்படும் மரக்கன்றுகளை பார்வையிட்ட மாவட்டக் கலெக்டர் மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து பலன் தரும் வகையில் உருவாக்கிட அஸ்வின் குழும நிர்வாகத்தினருக்கும், அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் வேம்பு, அசோகா, புளி, மகிழம், நீர் மருது, நாவல், இலுப்பை, மகாகனி, செம்மரம், தேக்கு, கொய்யா, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 40,000 மரக்கன்றுகளை பெரம்பலூர் அஸ்வின் குழுமம் வழங்கியுள்ளது.

மியாவாக்கி அடர்வன பகுதி உருவாக்குவதற்காக பெரம்பலூர் அஸ்வின் குழும குழும தலைவர் கே.ஆர்.வி.கணேசன், முதன்மை செயலாளர் அஸ்வின், நிர்வாக பங்குதாரர்கள் செல்வகுமாரி நிஷா ஆகியோர் ஆழ்துளை கிணறுகள், பைப்லைன், மரக் கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப் படும் 3.5 ஏக்கர் நிலப்பரப்பினை முழுவதும் சீர்திருத்தம் செய்து, மரக் கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மற்றும் மியாவாக்கி அடர்வனத்தை உருவாக்கும் பணியை மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன் முன்னெடுத்து செய்துள்ளார்.

அஸ்வின் குழும பணியாளர்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்தப்பணியினை வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் நகராட்சித்துறை அலுவலர்கள் மற்றும் அஸ்வின் குழும நிர்வாகிகள் முழு ஒத்துழைப்போடு இந்த மியாவாக்கி அடர்வனக் காடுகள் உருவாக்கும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சப்.கலெக்டர் கோகுல்,மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தரராமன், நீரினை பயன்படுத்து வோர் பாசன சங்கத் தலைவர் கண்ணபிரான், மாவட்டக் கலெக்டர் அலுவலக பொது மேலாளர் சரவணன், சப்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாரதிவளவன், நகராட்சி ஆணையர் ராமர், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அலுவலக சாலையில் 3.5 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்க 40,000 மரக்கன்றுகள் நடும் பணி appeared first on Dinakaran.

Related Stories: