சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா நேற்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இளையராஜாவுக்கு அண்ணாவின் நூலை அவர் வழங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர். நேரில் வந்து வாழ்த்திய முதல்வருக்கு இளையராஜா நன்றி தெரிவித்தார். ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இளையராஜா அறிமுகம் ஆனார்.
1970களின் இறுதியில் தொடங்கிய அவரது இசைப்பயணம் இப்போதும் தொடர்கிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்து, சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘சங்கத்தினர் சார்பில் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடத்தை புதுப்பித்து தருவதாக இளையராஜா அறிவித்திருந்தார். கொரோனா காலத்தால் வேலைகள் துவங்கவில்லை. அந்த பணிகளை துவங்க இளையராஜா அனுமதி வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.