டெல்லி: இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 26 சதவீத இறக்குமதி வரிக்கு எதிராக உடனடியாகப் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறின. ஒன்றிய அரசின் மவுனத்தால் இறால், ஜவுளி, நகை உற்பத்தி துறைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 26 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இந்தியா மீதான வரியைக் குறைக்க வாய்ப்புள்ளதாகவும் ஒன்றிய அரசின் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மேலும் அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘அமெரிக்கா – இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகளுடன், இந்தியா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மற்ற ஆசிய நாடுகளான சீனா, வியட்நாம், இந்தோனேஷியா போன்றவை இன்னும் அமெரிக்காவுடன் இதுகுறித்துப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்காத நிலையில், இந்தியா தற்போது இதற்கான வேலைகளை தொடங்கிவிட்டது. தைவான், இந்தோனேஷியா போன்ற நாடுகள் பதிலடி வரி விதிக்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், இந்தியாவும் அதே வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதேசமயம், சீனா 34% பதிலடி வரியை விதித்துள்ளதுடன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகின்றன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 43 லட்சம் கோடி) உயர்த்தும் நோக்கில், இரு நாடுகளும் கடந்த பிப்ரவரியில் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்த முடிவு செய்திருந்தன.
இதன் ஒரு பகுதியாகவும், அமெரிக்காவுடனான உறவைப் பேணவும், சில அமெரிக்கப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்க இந்தியா முன்வந்துள்ளது. சுமார் 23 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 2 லட்சம் கோடி) மதிப்புள்ள இறக்குமதிகள் மீதான வரியைக் குறைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே பிரீமியம் பைக்குகள், போர்பன் விஸ்கி போன்ற பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பாதித்த டிஜிட்டல் சேவைகள் வரியையும் இந்தியா நீக்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள இந்த வரிகளால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 0.20% முதல் 0.40% வரை (20 முதல் 40 அடிப்படைப் புள்ளிகள்) குறையக்கூடும். இந்தியா சார்பில் அமெரிக்காவுக்கு சுமார் 120-130 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்கிறது.
இதில் மருந்துப் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளின் பங்கு அதிகமாக உள்ளது. குறிப்பிடும்படியாக டிரம்ப் நிர்வாகம் மருந்துப் பொருட்களுக்கு வரி விதிக்கவில்லை. எனவே, ஒட்டுமொத்தமாக இந்திய ஏற்றுமதிகள் மீதான பாதிப்பு குறைவாகவே இருக்கும். இருப்பினும், இறால், ஜவுளி, நகை உற்பத்தி போன்ற சில துறைகள் பாதிக்கப்படலாம். எனவே அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது விதித்துள்ள 26 சதவீத இறக்குமதி வரிக்கு எதிராக உடனடியாகப் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை’ என்று அந்த வட்டாரங்கள் கூறின. அமெரிக்காவின் 26% இறக்குமதி வரிவிதிப்புக்கு எதிராக பதிலடி வரிவிதிப்பு அறிவிப்பை வெளியிடாமல் ஒன்றிய அரசு மவுனம் காப்பது குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி அளித்த பேட்டி ஒன்றில், ‘கூடுதல் வரி விதிப்பு இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவு பேச்சுவார்த்தை முழுமையாக தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது. அமெரிக்கா தான் விரும்பியதை செய்து முடித்துள்ளது. இந்திய மாணவர்களின் நுழைவு இசைவுகளை (விசா) பெருமளவில் அமெரிக்கா ரத்து செய்து வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு குரல் எழுப்பவில்லை. ஒன்றிய அரசு தனது முதுகெலும்பை நிமிர்த்தி, இந்திய மக்கள் மற்றும் தேச நலனுக்கு துணை நிற்க வேண்டிய நேரம் இது’ என்று கூறினார். இதே விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகமயமாக்கல் முடிவுக்கு வந்துவிட்டது
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள புதிய வரி விதிப்பு நடைமுறைகள் குறித்து, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் காரணமாக, உலகச் சந்தைகளில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு தொடங்கிய உலகமயமாக்கல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. அமெரிக்காவின் பொருளாதார தேசியவாத கொள்கையை நாங்களும் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது உலகமயமாக்கல் சாதகமாக இல்லை. ஆனால், அதற்காக வர்த்தகப் போரில் ஈடுபடுவது தீர்வல்ல என்று நம்புகிறோம். இந்தப் புதிய சூழலில், மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். உலக நாடுகள் தங்களது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். வேறு வழிகள் இல்லை’ என்றார்.
நிதிப் பற்றாக்குறைக்கு வரிவிதிப்பு தான் தீர்வு
கடந்த 2ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பு முறையை அறிவித்தார். டிரம்பின் வரி விதிப்பு நடைமுறையால் அதிக வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்ட நாடுகள் ெபரும் சிக்கல்களை சந்தித்துள்ளன. இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளால் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டுமானால், அந்த நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிப்பது தான். புதிய நடைமுறையால் அமெரிக்காவிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்கள் கிடைக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் இத்திட்டம் இருந்தாலும், தற்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. முந்தைய அதிபர் ஜோ பைடனின் ஆட்சி காலத்தில், மேற்கண்ட நாடுகளுடனான உபரித் தொகை அதிகரிக்கப்பட்டது. தற்போது விரைவாக மாற்றியமைக்கப்பட்டதால் வரிகள் மூலம் அமெரிக்காவிற்கு நன்மைகள் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின்படி, கடந்த 2024ம் ஆண்டில் சீனாவுடனான அமெரிக்கப் பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறை $295.4 பில்லியனாகவும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பற்றாக்குறை $235.6 பில்லியனாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The post அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி வரியை விதித்த சீனா, கனடாவை பின்பற்ற இந்தியா தயங்குவது ஏன்? இறால், ஜவுளி, நகை உற்பத்தி துறைகள் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.