திருமலை திருப்பதி தேவஸ்தான கோ-சாலையில் 100 பசுக்கள் உயிரிழப்பு: முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குற்றச்சாட்டு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் வெங்கடேஸ்வரா கோ-சாலையில் சரியான பராமரிப்பு இல்லாமல் கடந்த 3 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட பசு மாடுகள் இறந்துவிட்டதாக முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்ட தலைவருமான கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இந்து சனாதன தர்மம் காப்பாற்றப்பட்டு அழிந்து வரக்கூடிய நமது நாட்டு பசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பசு இனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது.

மேலும் பசு மூலம் கிடைக்கக்கூடிய பால், தயிர், வெண்ணெய், பசு சானம் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு 5 ஆண்டுகளில் ₹50 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் சந்திரபாபு நாயுடு, பவன்கல்யாண் , பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு கோசாலையில் போதிய பராமரிப்பு இல்லாமல் 100 பசுக்கள் இறந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த குற்றச்சாட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்.வி. கோ-சாலையில் பசுக்கள் இறந்துவிட்டன என்று ஒரு சிலர் பரப்பி வரும் பிரசாரம் உண்மையல்ல. இறந்த பசுக்களின் புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் படங்கள் உண்மையில் தேவஸ்தான கோசாலைக்கு உண்டானது இல்லை.

இறந்த சில பசுக்களின் புகைப்படங்களை தேவஸ்தானத்தின் கோசாலையில் இறந்ததாகக் காண்பித்து பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் பிரசாரம் இது. பசுக்கள் இறந்துவிட்டன என்ற பிரசாரத்தை தேவஸ்தானம் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற பொய்யான பிரசாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோ-சாலைக்கு நேரில் வந்தால் உண்மை நிலையை காண்பிக்க தயார்
இதுகுறித்து ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான பானு பிரகாஷ் ரெட்டி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருப்பதி மாட்டுத் தொழுவத்தில் 1768 மாடுகள் உள்ளன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது தேவஸ்தானத்தில் பல முறைகேடுகள் நடந்தன. விசாரணை நடந்து வருவதால் உண்மை விரைவில் அறிக்கையாக வெளிப்படும். சில பசுக்கள் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டன. நாங்கள் பசுக்களுக்கு தாராளமாக உணவை வழங்குகிறோம். உங்கள் ஆட்சியில் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டது. தேவஸ்தான நிதியை மாநில பத்திரங்களாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது தேவஸ்தானத்தின் நிதி ₹1100 கோடி வெவ்வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டது. ரயில் பாதையில் ஒரு பசு இறந்தது, இந்த சம்பவம் குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் விசாரணையை மேற்கொண்டுள்ளது. கருணாகர் ரெட்டி பொய்களை பரப்புகிறார். வேறொருவர் எழுதிய ஸ்கிரிப்டைப் நீங்கள் படிக்காதீர்கள். கடந்த 2015ல் கோ பூஜை மற்றும் கோ துலாபாரம் நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் அந்த திட்டத்தை உங்கள் ஆட்சியில் நிறுத்திவிட்டீர்கள். தேவஸ்தானம் குறித்து பொய்களைப் பரப்புபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருமலை திருப்பதி தேவஸ்தான கோ-சாலையில் 100 பசுக்கள் உயிரிழப்பு: முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: