ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் வேறு சமூக பெண்ணை காதலித்த தலித் இளைஞரை நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதில்,5 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம், சக்தி மாவட்டம் மல்கரோடா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தாப்ரா என்ற இடத்தை சேர்ந்த ராகுல் அஞ்சல்(21).தலித் வகுப்பை சேர்ந்த ராகுல் அஞ்சல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்துள்ளார். அதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. கடந்த 8ம் தேதி ராகுல் அஞ்சல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இதை பார்த்த பெண்ணின் உறவினர்கள் ராகுலை நிர்வாணப்படுத்தி கயிற்றால் துாணில் கட்டி செருப்பு, கம்பு ஆகியவற்றை கொண்டு அடித்துள்ளனர். அதற்கு அடுத்த நாள் தெருவில் நடந்து சென்ற வாலிபரை பெண்ணின் உறவினர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாவட்ட எஸ்பி கூறுகையில், ‘‘இளைஞர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை. இதுவரை 5 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
The post சட்டீஸ்கரில் வேறு சமூக பெண்ணை காதலித்த தலித் இளைஞரை நிர்வாணமாக்கி தாக்குதல்: வீடியோ வைரலானதையடுத்து போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.