புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘2024ம் ஆண்டு தேர்தலுக்கு பின், பிரதமர் மோடி வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை மிகுந்த ஆரவாரத்துடன் அறிவித்தார். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக உறுதி அளித்தார். இந்த திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து சுமார் ஒரு ஆண்டு ஆகிறது. அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10ஆயிரம் கோடியை அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது வேலையின்மை பிரச்னையை தீர்ப்பதில் பிரதமர் மோடி எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது.
சிறு,குறு பெரு நிறுவனங்களில் பெரிய அளவிலான முதலீடு, உள்ளூர் உற்பத்தி நெட்வொர்க்குகளுக்கான ஆதரவு மற்றும் சரியான திறன்களை கொண்ட இளைஞர்கள் தான் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வழியாகும். பிரதமர் மோடி இந்த யோசனைகளுடன் உடன்பட மாட்டார். ஆனால் நேரடியாக கேட்கிறேன். நீங்கள் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தை சிறந்த வெளிப்படைத்தன்மையுடன் அறிவித்தீர்கள். ஆனால் இந்த ரூ.10ஆயிரம் கோடி திட்டம் எங்கே மறைந்துவிட்டது. உங்கள் வாக்குறுதிகளுடன் எங்களது வேலையற்ற இளைஞர்களையும் நீங்கள் கைவிட்டுவிட்டீர்களா?” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜவின் ஐடி துறை தலைவர் அமித் மாளவியா, ” இது ஒரு அறியாத செயல் அல்ல, இது யதார்த்தத்தை சிதைப்பதற்கான திட்டமிட்ட உத்தி. அவரது தளத்தை பயன்படுத்தி அறியாமை என்ற போர்வையில் தவறான தகவல்களை பரப்புகிறார்” என்று பதிலளித்து இருந்தார்.
உள்நாட்டு முதலீடு அழிப்பு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், ‘‘பிரதமர் மோடி அரசு உள்நாட்டு முதலீட்டை அழிப்பதுடன் மற்றொரு வகையான எப்டீை(பயம், வஞ்சகம் மற்றும் மிரட்டல்) நடைமுறைப்படுத்துவதன் மூலமாக வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடு கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2012-2013ம் ஆண்டில் இந்தியாவில் நிகர அந்நிய நேரடி முதலீடு 19பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2024-2025ம் ஆண்டு ஏப்ரல்-ஜனவரியில் 1.4பில்லியன் அமெரிகக் டாலருக்கும் குறைவாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post வேலைவாய்ப்புடன் ஊக்கத்தொகை மற்றொரு பொய் வாக்குறுதி: ராகுல்காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.