நீலகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

*வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் பகுதியில் கொட்டிய கன மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை ஊட்டியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பெய்வது வழக்கம்.

இதனால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். அணைகள் நிரம்பி மின் உற்பத்தியிலும் பாதிப்பு இருக்காது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை துவங்கி பல மாதங்கள் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழையும் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்கள் கொட்டி தீர்த்தது.

எனினும், கடந்த ஜனவரி மாதம் முதல் மழை பெய்யாத நிலையில், பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஆறுகள், நீரோடைகள், குளங்களில் தண்ணீர் குறைந்தது. போதிய தண்ணீர் இன்றி ேதயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை சில மணி நேரம் மழை பெய்தது. நேற்று பிற்பகல் 12 மணிக்கு துவங்கிய மழை சில மணி நேரம் நீடித்தது.

ஊட்டி, குன்னூர் மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. கோத்தகிரியில் மிதமான மழை பெய்தது. விவசாய நிலங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்ப துவங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை மற்றும் மேக மூட்டதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெயில் குறைந்து ரம்மியமான காலநிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் மிதமான கால நிலை நிலவுகிறது.

சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் குளிரான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். தொடர்ந்து, ஓரிரு நாட்கள் இது போன்று கன மழை பெய்தால், அனைத்து குடிநீர் ஆதாரங்களிலும், அணைகளிலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது.

இதனால், கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. மின் உற்பத்திக்கு பயன்படும் அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது.மேலும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

அனைத்து வனங்களிலும் பசுமை திரும்ப வாய்ப்புள்ளது. நீலகிரியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: