மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 182 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 189 பேருடன் மும்பை புறப்பட்ட இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் ஓடத் துவங்குவதற்கு முன் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். பின்னர் இயந்திரக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் 182 விமானப் பயணிகளும் செய்வதறியாமல் பரிதவித்தனர். சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.55 மணியளவில் மும்பை செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் புறப்படத் தயார்நிலையில் இருந்தது. இதில் 182 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 189 பேர் ஏறி அமர்ந்ததும், மும்பைக்குப் புறப்படத் தயாரானது.
இதைத் தொடர்ந்து, ஓடுபாதையில் விமானம் ஓடத் துவங்குவதற்கு முன், அதன் இயந்திர செயல்பாடுகளை விமானி ஆய்வு செய்தார். இதில் ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார். இதே நிலையில் விமானத்தை இயக்கினால், நடுவானில் பறக்கும்போது பேராபத்து நிகழலாம் என்பதை விமானி உணர்ந்து, இதுபற்றி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பொறியாளர்கள் உள்ளே சென்று, இயந்திர கோளாறுகளை பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதுவரை அனைத்து பயணிகளும் விமானத்திலேயே அமரவைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மும்பை செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர பழுதுகள் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது.
பின்னர், சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இன்று காலை 6.30 மணியளவில், சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 182 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 189 பேருடன் மும்பைக்கு இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறுகளை விமானி உரிய நேரத்தில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டு, அதில் செல்லவிருந்த 182 பயணிகள் உள்பட 189 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.
The post மும்பை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: சென்னை விமானநிலையத்தில் 182 பயணிகள் பரிதவிப்பு appeared first on Dinakaran.