அடிப்படை வசதிகளை மேம்படுத்த வார்டு வாரியாக மக்கள் குறைகேட்பு

நாமக்கல், ஏப்.4: நாமக்கல் மாநகராட்சி பகுதியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வார்டு வாரியாக குறைகேட்பு முகாம் நேற்று தொடங்கியது. மேயர், துணை மேயர் மற்றும் கமிஷனர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

நாமக்கல் மாநகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மேயர், துணை மேயர், கமிஷனர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டுமென மாமன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று, நாமக்கல் மாநகராட்சி 9வது வார்டில் மக்களை சந்தித்து குறைகேட்பு நிகழ்ச்சி துவங்கியது.

மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் காலை 6.30 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நல்லிபாளையம் மேற்கு வீதி, தெற்கு வீதி, சாவடித்தெரு, பாரதிதாசன் தெரு, சின்ன அய்யம்பாளையம், அருந்ததியர் காலனி, இலக்கம்பாளையம், யாழ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்களை சந்தித்து மேயர், துணை மேயர், கமிஷனர் ஆகியோர் வார்டில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும், பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, தூய்மை பணி ஆகியவற்றில் உள்ள குறை மற்றும் நிறைகளை கேட்டறிந்தனர். அப்போது, சீரான குடிநீர் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். 2 தினங்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. அதுவும் அனைத்து குடியிருப்புகளுக்கும் சீராக கிடைப்பதில்லை. எனவே, அதில் உள்ள குறைபாட்டை போக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட சாலைகள் இன்னும் சீர் செய்யப்படாமல் உள்ளது.

நகருக்குள் செல்லும் சாலையின் சில பகுதிகள் குண்டும், குழியுமாக உள்ளது என தெரிவித்தனர். 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் நகருக்குள் வந்து செல்ல இலக்கம்பாளையம் பகுதியில் இருந்து பஸ் வசதிவேண்டும். கோடை காலம் வந்துவிட்டதால், அனைத்து குடியிருப்புகளுக்கும் சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுகொண்டார்.

அதற்கு அதிகாரிகள் குழுவினர் பதில் கூறுகையில், ‘சாலை சீரமைப்பு பிரச்னை உடனடியாக சரி செய்து கொடுக்கப்படும். குடிநீர் இணைப்பில் உள்ள குறைபாடுகளும் சரி செய்யப்பட்டு, அனைத்து குடியிருப்புகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள், குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கும்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்கவேண்டும். குப்பைகளை சாலைகள், சாக்கடைகளில் வீசக்கூடாது. வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

இதுகுறித்து மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் கூறுகையில், ‘நாமக்கல் மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நேரடி ஆய்வு செய்யப்பட்டு மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். 9வது வார்டில், ஒரே நாளில் 10 இடங்களில் அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு பணிகளை 2 நாட்களில் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என்றனர். ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், நந்தகுமார், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர் செல்வகுமார், உதவி பொறியாளர் பிரகாஷ், நகரமைப்பு அலுவலர் கலைவாணி, மின் பணியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அடிப்படை வசதிகளை மேம்படுத்த வார்டு வாரியாக மக்கள் குறைகேட்பு appeared first on Dinakaran.

Related Stories: