நடப்பாண்டு கோடையில் மின் தடைக்கு வாய்ப்பில்லை

நாமக்கல், ஏப்.3: நாமக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தில் மின் தடை ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோடைக்காலம் துவங்கியுள்ளதால், பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின் சாதனங்களான பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றில் உள்ள பழுதுகளை சரி பார்த்து கொள்ள வேண்டும். இதன்மூலம் மின் தீ விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். கோடை காலத்தில் லோ வோல்டேஜ் மின்சாரம் பிரச்னை ஏற்படும். அதனை சரிசெய்ய, மின்சாரத்துறை போதுமான ஏற்பாடுகளை செய்துள்ளது. நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில், 95 மின்வாரிய பகுதி அலுவலகங்கள் அமைந்துள்ளன. அனைத்து அலுவலகங்கள் மூலம், தனி வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தப்பட்டு, அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மின் வினியோகத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது.

மேலும், உடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகள் தாழ்வாக செல்வது போன்ற புகார்கள் குறித்து, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலத்தில் மின்தடை ஏற்படாது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர்கள் சீரமைப்பு, புதிய டிரான்ஸ்பார்மர்கள் தேவையான இடங்களில் ஏற்படுத்துல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம், குளிர்காலம் என இரண்டு காலங்களிலும் மின்தேவை சரிசமமாகத்தான் இருக்கும். ஆனால், கோடை காலத்தில் மின் டிரான்ஸ்பார்மரில் லோடு அதிகரிக்கும். பொதுமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மின்வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் பணியில் இருக்கிறார்கள்.

மின்சாதன பொருட்களை, கோடை காலத்தில் பொதுமக்கள் சற்று ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள பழைய வயர்களை மாற்றிக் கொள்ளவேண்டும். மின் வினியோகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து 94987 94987 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும். இதற்கான மின்னகம் என்ற பிரத்யேக அமைப்பு, 24 மணி நேரமும் அனைத்து பகுதியிலும் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும், நாமக்கல் பகுதியில் மின்தடை, வோல்டேஜ் பிரச்னை, மின் இணைப்பில் பெயர் மாற்றுதல் தொடர்பாக 242 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி, மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், பள்ளிபாளையம் ஆகிய 5 செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இதில், மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள குறைபாடுகள், அதிக கட்டணம் வந்துள்ளதாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு, மின் கட்டணம் குறித்த குறைபாடுகள் மற்றும் லோவோல்டேஜ் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம்.

டிரான்ஸ்பார்மர்களின் அடியில், பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வைக்கக்கூடாது. இதன் மூலம் கோடை காலத்தில் தீவிபத்துகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து டிரான்பார்மர்களும் முக்கிய பகுதியாக கண்டறியப்பட்டு, அதை சுற்றி மின்வேலி அமைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் டிரான்ஸ்பார்மர்கள் அமைந்துள்ள பகுதியில், மின் வினியோகம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி வைக்கப்படுகிறது. கோடை காலத்தில் மின் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க, பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மே மாதம் வரை மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் மின் தடைக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு சபாநாயகம் தெரிவித்தார்.

The post நடப்பாண்டு கோடையில் மின் தடைக்கு வாய்ப்பில்லை appeared first on Dinakaran.

Related Stories: