எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிக்கு 2 மையங்கள் அமைப்பு

நாமக்கல், ஏப்.9: நாமக்கல் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிக்கு, 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்து வரும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 17ம் தேதி நிறைவடைகிறது.

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு, கடந்த 28ம் தேதி துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் 92 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 275 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 38 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 தேர்வுகள் முடிவடைந்துள்ளது. அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளது. வரும் 15ம் தேதியுடன் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவடைகிறது. இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி விடைத்தாளை மதிப்பீடு செய்ய, நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையம் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்து முடிந்த எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு விடைத்தாள்கள், இந்த மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிருந்து வேறு மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. ராசிபுரம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு, முகாம் அலுவலராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பச்சமுத்து, திருச்செங்கோடு மையத்திற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், தற்போது 3 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. 1,400 முதுகலை ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 17ம் தேதியுடன் பிளஸ்2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு பின், அதே மையங்களில் பிளஸ்1 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். தற்போது நடைபெற்று வரும் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு விடைத்தாளை மதிப்பீடு செய்ய, 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிவடைந்த ஒரு வாரத்திற்குள், விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணையை தேர்வுத்துறை விரைவில் வெளியிடும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிக்கு 2 மையங்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: