சேந்தமங்கலம், ஏப்.4: சேந்தமங்கலம் சோமேஸ்வரர் சுவாமி கோயில் தெப்பக்குளத்தை சுற்றி நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேந்தமங்கலம் பேரூராட்சியில், பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் சுவாமி-சௌந்தரவல்லி தாயார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் வழியில் பிரமாண்ட தெப்பக்குளம் அமைந்துள்ளது. மாசி மக தேர் திருவிழாவின்போது, குதிரை வாகனத்தில் தெப்பகுளத்திற்கு பவனி வரும் பெருமாள் சுவாமி, சோமேஸ்வரர் திருக்கல்யாணத்தை கண்டு செல்வது வழக்கம். விழாவின்போது நடத்தப்படும் தெப்ப உற்சவம் பிரபலம். நாளடைவில் இந்த குளம் சிதிலமடைந்து கழிவுநீர் கிடங்காக மாறி கடும் துர்நாற்றம் வீசியது. இந்த தெப்பக்குளத்தை சீரமைத்து தெப்ப உற்சவ விழா நடத்த வேண்டுமென பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ₹16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. குளத்திற்கு கழிவுநீர் வரும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும், சிதிலமடைந்த சுவர்கள் சீரமைக்கப்பட்டது. தற்போது, தெப்பக்குளத்தைச் சுற்றிலும் நடைபாதை, குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி, சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன் ஆய்வு செய்தார். அப்போது, குளம் முழுவதும் சீரமைக்க, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து மேலும் ₹16 லட்சம் கேட்கப்பட்டுள்ளது. பணிகள் முடிக்கப்பட்டு, தெப்ப உற்சவம் விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்,’ என்றார்.
The post தெப்பக்குளத்தை சுற்றி நடைபாதை, சிறுவர் பூங்கா appeared first on Dinakaran.