ராசிபுரம், ஏப். 9: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே புதுப்பட்டியில் துலுக்க சூடாமணி மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி இந்த கோயில் திருவிழா, ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் நடும் விழாவுடன் துவங்கியது. கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடக்கிறது. தொடர்ந்து தேர்த்திருவிழா நடக்கிறது. பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், கையில் வேப்பிலையுடன் பக்தர்கள் தேருக்கு பின்புறமாக உருளுதண்டம் போடுவார்கள்.
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவிழாவிற்கு வருவார்கள். விழாவை முன்னிட்டு திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடக்கும் போது, உடனுக்குடன் பிடித்து விசாரித்து தீர்ப்பு வழங்குவது நடைமுறையில் உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் திருவிழாவின் போது, 2 நாட்களுக்கு ராசிபுரம் நீதிமன்ற பணிகள், கோயில் திருவிழா நடைபெறும் இடத்தில் நடப்பது வழக்கம்.
இந்த திருவிழா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடித்து வந்து, போலீசார் ஆஜர்படுத்துவார்கள். விசாரணைக்கு பின் நீதிபதி தீர்ப்பு கூறுவார். இதற்காக புதுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் போது, 2 நாட்கள் நீதிமன்ற பணிகள் இடம்பெயரும் வழக்கம் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
The post கோயில் திருவிழாவிற்காக இடம்பெயரும் நீதிமன்றம் appeared first on Dinakaran.