சேந்தமங்கலம், ஏப்.4: புதுச்சத்திரம் ஒன்றியம், களங்காணி ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தனித்தனியாக விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவியர் விடுதி சின்னகளங்காணி பகுதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் பழுதானது. சில ஆண்டுக்கு முன், அப்பகுதியில் புதிதாக அரசு விடுதி கட்டப்பட்டு, மாணவிகள் அங்கு தங்கி படித்து வருகின்றனர்.
பழுதடைந்த பழைய மாணவிகள் விடுதி மரம்-செடி, கொடிகள் முளைத்து, முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த விடுதியின் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த விடுதிக்குள் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால், அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பழைய விடுதி கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது விடுதி முழுவதும் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி, விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அருகிலேயே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதால், அங்குள்ள குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே, மாவட்டம் நிர்வாகம் உடனடியாக பழைய விடுதி கட்டிடத்தை இடித்து, அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
The post பாழடைந்த மாணவியர் விடுதி கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.