வல்லம், மார்ச் 26: தஞ்சை அருகே அறுந்துகிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்த ஓய்வுபெற்ற சர்வேயர் பலியானார். தஞ்சாவூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (76). இவர், சர்வேயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாகராஜன், நேற்று காலை வீட்டின் எதிரே உள்ள பஞ்சாயத்து போர்டு மோட்டார் சுவிட்சை ஆன் செய்வதற்காக சென்றார். அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி நாகராஜன், தூக்கி வீசப்பட்டார்.
நாகராஜனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாகராஜன், பரிதாபமாக இறந்துவிட்டார்.தகவலறிந்த வல்லம் போலீசார் நாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post தஞ்சை அருகே மின்கம்பியை மிதித்த ஓய்வு பெற்ற சர்வேயர் பலி appeared first on Dinakaran.