பூந்தமல்லி, மார்ச் 27: பூந்தமல்லியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் வைக்கக்கூடிய ரெப்ரிஜிரேட்டர் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இருந்துதான் சூப்பர் மார்க்கெட், குளிர்பான கடைகள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ரெப்ரிஜிரேட்டர்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பணியாளர்கள் வேலை முடிந்து சென்ற பின்பு குடோன் வழக்கம்போல் மூடப்பட்டது. ஒரே ஒரு காவலாளி மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று காலை குடோனில் திடீரென்று தீப்பிடித்து மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அந்த குளிர்சாதன பெட்டிகளில் இருந்த கம்ப்ரசர்கள் வெடித்து சிதறின. தீ விபத்தில் குடோனில் இருந்த ஏராளமான ரெப்ரிஜிரேட்டர்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் அந்த பகுதியில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்ததால் நீண்ட தூரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர், செங்குன்றம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியும் நடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி வட்டாட்சியர் சரஸ்வதி, பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகவினர் வந்து பார்வையிட்டனர்.
போக்குவரத்து உதவி காவல் ஆணையர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான ரெப்ரிஜிரேட்டர்கள் எரிந்து நாசம் அடைந்திருக்கலாம் என தெரிகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். குடோன் மூடப்பட்டு இருந்ததால் பணியாளர்கள் யாரும் பணிக்கு வராத நிலையில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பூந்தமல்லியில் பரபரப்பு குளிர்சாதன குடோனில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.