நிலங்கள் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 161 விவசாயிகள் கைது: கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு

திருவள்ளூர், மார்ச் 27: திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 41 பெண்கள் உள்பட 161 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பொருட்டு என்.எச் 205 தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டிவனத்தில் இருந்து நகரி என்.எச் 716 பி ரயில் பாதை திட்டங்களுக்காக நிலம், வீடு, கடைகள், மரங்கள் மற்றும் மாந்தோப்புகள் ஆகியவற்றை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இழப்பீடு தொகைக்கான ஆவணங்கள் சமர்ப்பித்தும் பணம் வழங்காமல் காலதாமதம் செய்வதை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல் துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசார் அனுமதி மறுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ‘‘நாங்கள் முறையாக அனுமதி பெற்றுதான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதற்குக்கூட எங்களுக்கு அனுமதி இல்லையா’’ எனக் கூறி காவல் துறையிடம் விவசாய சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் விவசாய சங்கத்தினரை குண்டுகட்டாக தூக்கி கைது நடவடிக்கையில் ஈடுபட்டபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையும் மீறி 41 பெண்கள் உள்பட 161 பேரை கைது செய்து பேருந்து மூலம் தனியார் மண்டபத்தில் போலீசார் சிறை வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post நிலங்கள் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 161 விவசாயிகள் கைது: கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: