கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 5 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு திருவண்ணாமலை மாவட்டத்தில்

கலசபாக்கம், மார்ச் 26: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில் வரும் 2030 ஆண்டிற்குள் தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தர திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டு பட்ஜெட்டில் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீண்டும் தமிழகத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தர இந்த பட்ஜெட்டில் ரூ,3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்பதற்காக, வாழ தகுதியற்ற நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் 5000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியம் வாரியாக வீடுகள் எண்ணிக்கை வருமாறு: திருவண்ணாமலை 550, கீழ்பென்னாத்தூர் 300, துரிஞ்சாபுரம் 200, போளூர் 250, கலசபாக்கம் 300, சேத்துபட்டு 150, செங்கம் 525, புதுப்பாளையம் 350, தண்டராம்பட்டு 550, ஜவ்வாதுமலை 200, செய்யாறு 100, அனக்காவூர் 150, வெம்பாக்கம் 175, வந்தவாசி 325, தெள்ளார் 350, பெரணமல்லூர் 200, ஆரணி 175 மேற்கு ஆரணி 150 என திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 360 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு 3 தவணையில் பில் வழங்கப்பட்டு வருகிறது. அடித்தளம் ரூ 75 ஆயிரம், மேல் கூரை ரூ.1.50 லட்சம், பணி நிறைவு ரூ.85 ஆயிரம், தனிநபர் கழிவறை 12000, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.31 900 என ரூ மூன்று லட்சத்து 53 ஆயிரத்து 900 வழங்கப்படுகிறது. மேலும் வெளிச்சந்தையில் கம்பி விலை சிமெண்ட் விலை அதிகம் என்பதால் கட்டுமான பணிகளை மேற்கொள்ள 140 மூட்டை சிமெண்ட் 320 கிலோ கம்பி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சந்தை விலையை விட குறைவான விலைக்கு வழங்கப்படுகிறது.

The post கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 5 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: