திருவண்ணாமலை, மார்ச் 25: திருவண்ணாமலை மாவட்டத்தில், காசநோய் இல்லாத கிராமம் எனும் இலக்கை அடைந்த ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றுகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார். உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மேலும், வரும் 2030ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியா எனும் இலக்கை அடைய தீவிர களப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் ஒழிப்பில் தீவிரமாக களப்பணியாற்றிய ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் காசநோய் இல்லாத கிராமம் எனும் இலக்கை அடைந்த 30 கிராம ஊராட்சிகளுக்கு, பாராட்டுச் சான்றுகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ், மருத்துவ இணை இயக்குநர்(காசநோய்) அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 2024 ஆண்டு 98,423 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு 2,486 நபர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், காசநோய் சிகிச்சை காலம் முழுவதும் மாதம் ₹1000 நேரடியாக சம்மந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் ஊட்டச்சத்துக்காக வரவு வைக்கப்பட்டது என அப்போது தெரிவிக்கப்பட்டது. மேலும், காசநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையை திருவண்ணாமலை மாவட்டத்தில் அடைய அனைவரும் உறுதியேற்று, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
The post காசநோயை முற்றிலும் கட்டுப்படுத்திய 30 ஊராட்சிகளுக்கு பாராட்டுச்சான்று கலெக்டர் வழங்கினார் திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.