கல்வியும், கல்வியைச் சார்ந்த ஆளுமையும் எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்யும் நலத்திட்டங்கள் வழங்கி கலெக்டர் பேச்சு பெரணமல்லூர் அருகே மனுநீதி நாள் முகாம்

பெரணமல்லூர், மார்ச் 26: பெரணமல்லூர் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் நலத்திட்டங்களை வழங்கி கல்வியும், கல்வியை சார்ந்த ஆளுமையும் எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்யும் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் பேசினார். பெரணமல்லூர் அடுத்த கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். செய்யாறு கோட்டாட்சியர் பல்லவிவர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்துப்பட்டு தாசில்தார் அகத்தீஸ்வரர் வரவேற்றார். இதனை தொடர்ந்து கலெக்டர் தர்ப்பகராஜ் 255 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: பொதுவாக மக்கள் தொடர்பு முகாம் என்பது பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இதனுடைய முக்கிய நோக்கம். குறிப்பாக பொது சுகாதாரத்துறை சார்பாக மக்களின் ஆரோக்கியத்தை கண்டறிந்து அதன் மூலம் சரி செய்வது.

மேலும் கர்ப்பிணிகள் இருந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்க வேண்டும், ஒவ்வொரு மாத குறிப்பிட்ட கால இடைவெளியில் கர்ப்பிணி தாய்மார்களின் ஆரோக்கியத்தை கண்டறிந்து மருத்துவமனைக்கு வரவழைத்து உரிய மருத்துவ வசதிகளை செய்து மிக ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க வசதிகள் செய்யப்படுகிறது. தவிர பெண்கள் இங்கே அதிகமாக உள்ளார்கள். நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் பெண் குழந்தைகள் கல்வி கற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உதாரணமாக புதுமைப்பெண் திட்டம்இதன் மூலம் பெண்களின் உயர் கல்வி உறுதி செய்யப்படுகிறது. இதில் அவர்கள் எக்காரணம் கொண்டும் கல்வி கற்பது நிறுத்தி விடக்கூடாது. பெண் குழந்தைகள் எதனால் கல்வி கற்பதுதடைபடுகிறது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்தால் சமூகத்தில் மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்வது வழக்கமாக உள்ளது.

ஆகவே தாய்மார்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இதில் குறைந்த வயதில் திருமணம் செய்து வைத்தால் அவர்கள் இரண்டு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். ஒன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இரண்டு அவர்களது உயர் கல்வி தடைபடும். ஏனென்றால் கல்வியும், கல்வியைச் சார்ந்த ஆளுமையும் எதிர்காலவாழ்க்கையை உறுதி செய்யும். பொருளாதார தற்சார்பை கொடுக்கும். யாரையும் சார்ந்திருக்கும் கட்டாயத்தை கொடுக்காது. ஆகவே இங்கே இருக்கும் பெண்கள் அனைவரும் எப்பாடுபட்டாவது தமிழக முதல்வர் முன்னெடுக்கும் திட்டத்தை பயன்படுத்தி பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். குறிப்பாக கோழி புலியூர் நடுநிலைப்பள்ளி மாணவி சன்மதிகோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலானகேலோ இந்தியா ஊஷ் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சான்றிதழ் மற்றும் மெடலை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

The post கல்வியும், கல்வியைச் சார்ந்த ஆளுமையும் எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்யும் நலத்திட்டங்கள் வழங்கி கலெக்டர் பேச்சு பெரணமல்லூர் அருகே மனுநீதி நாள் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: