43 குளங்களில் இலவசமாக மண் அள்ள அனுமதி வீட்டு மனைகள், செங்கல் சூளைகளுக்கு விற்பனையா?

*அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்

நாகர்கோவில் : குமரியில் 43 குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாய பணிகளுக்கு பதிலாக வீட்டு மனைகள் மற்றும் செங்கல் சூளைகளுக்கு மண் விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குமரியில் குளங்களை தூர் வாரி ஆழப்படுத்தும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், தோவாளை தாலுகாவில் 15 குளங்களும், அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 28 குளங்களிலும் மண் எடுத்துக் கொள்ள அந்தந்த வட்டாட்சியர்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு கட்டண அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த மண், தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி இலவசமாக வழங்க உத்தரவிட்டதன் படி, கட்டணம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, விவசாயிகளிடம் விண்ணப்பங்களை பெற்று வேளாண்துறை அதிகாரிகள் களஆய்வு செய்து, எவ்வளவு மண் வழங்கலாம் என பொதுப்பணித்துறை நீர் வள ஆதார பிரிவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும். அந்த பரிந்துரையின் படி, நீர் வள ஆதார பிரிவு அதிகாரிகள் மண் எடுத்து செல்லும் டெம்போக்களுக்கு பாஸ் வழங்குவார்கள்.

ஆனால், தற்போது, குளங்களில் எடுக்கப்படும் மண்ணை விவசாய நிலங்களில் கொட்டுவதற்கு பதில் வீட்டு மனைகள் மற்றும் செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அச்சன்புதூர், இறச்சகுளம் பகுதிகளில் உள்ள குளங்களில் இருந்து எடுக்கப்படும் மண் நேரடியாக வீட்டு மனைகளில், கொட்டப்படுவதுடன், இப்பகுதியில் நவீன செங்கல் சூளைகளுக்கு நீண்ட கால தேவைகளுக்கு இருப்பு வைக்கும் வகையில், டெம்போக்களில் வரிசையாக மண் கொண்டு செல்லபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இறச்சகுளத்தில் பிரதான சாலையான அசம்பு சாலையில் இறச்சகுளம் பெரிய குளத்தை ஒட்டி வயலாக இருந்த பகுதியில் வீட்டு மனை அமைக்க மண் பகலிலேயே கொட்டப்படுகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

தேரூர் குளத்தில் மண் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தற்போது அங்கு மண் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பறக்கை குளத்தில் மண் எடுக்கப்படுகிறது.

வீட்டு மனை மற்றும் செங்கல் சூளைகளுக்கு மண் விற்பனை செய்யப்படுவதுடன், விவசாய தேவைக்காக மண் கேட்பவர்களிடமும் ஒரு டெம்போவிற்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை பணம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகாக்களில் 80 சதவீதம் வயல்கள் கடந்த 20 ஆண்டுகளில் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. எஞ்சிய சொற்ப நிலத்தையும், வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும் நிலையில், தற்போது குளங்களில் எடுக்கப்படும் மண்ணும் வீட்டு மனைகளுக்கு பயன்படுத்தப்படுவது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வருவாய்த்துறையினர் மட்டுமே தங்களது வேலை பளுவிற்கு இடையில், இதனை கண்காணிக்க வேண்டியது உள்ளது. எனவே வேளாண்துறை, பொதுப்பணித்துறை நீர் வள ஆதார பிரிவு மற்றும் காவல் துறையினர் மூலம் முறையாக கண்காணித்து வீட்டு மனைகளில் கொட்டப்படுவதை தடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, குளங்களில் தூர் வாரப்படும் மண் கண்டிப்பாக விவசாயத்திற்கு தான் பயன்படுத்த வேண்டும். எனினும், செங்கல் சூளைகள் குடிசை தொழில் என்பதால், அதற்கு வழங்குவதை தடை செய்ய வேண்டாம் என கருணை அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக பெருமதிப்பீடு செய்து, நவீன செங்கல் சூளைகளில் மண் சேகரித்து வைத்து நீண்ட கால தேவைக்கு ஒரு சிலர் பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றி தகவல் தெரிந்தால், வட்டாட்சியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். வீட்டு மனைகளில் இந்த மண்ணை கொட்டுவதற்கும் அனுமதி இல்லை என்றனர்.

கரையோரம் வெட்டக்கூடாது

இதுகுறித்து பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோவிடம் கேட்டபோது, வயல்களை வீட்டுமனை ஆக்குவதை எதிர்த்து 6 வழக்குகள் போட்டும், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், வருவாய்த்துறையினர் நுட்பமாக பதில் அளித்து, வயல்கள் வீட்டு மனை ஆக்குவதற்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் எஞ்சிய விவசாயத்தை காக்க குளங்கள் தூர் வாரப்படுவது அவசியம். குளங்களில் எவ்வளவு ஆழப்படுத்தி வேண்டுமானாலும் மண் எடுக்கட்டும்.

ஆனால், விவசாய தேவைக்காக எடுப்பவர்களிடம் ஆயிர கணக்கில் பணம் கேட்பது கண்டிக்கத்தக்கது. விவசாய பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குளங்களில் கரையோரம் மண் எடுப்பது, ஆங்காங்கே துண்டு துண்டாக மண்ணை வெட்டி எடுப்பது ஆபத்தானது. ஆனால், இப்படிதான் தற்போது மண் எடுக்கிறார்கள்.

இதனை நாங்கள் கண்காணிக்கும் போது முறையாக எடுப்பது போல் இருந்து விட்டு எங்கள் சங்க பிரதிநிதிகள் குளத்தில் இருந்து செல்லும் நேரம், விதிகளை காற்றில் பறக்க விடுகின்றனர்.
மேலும், காவல் துறை உள்பட சம்மந்தப்பட்ட துறைகளின் சில அதிகாரிகளுக்கு மாமூல் தினசரி செல்கிறது. இதனையும், கலெக்டர் மற்றும் எஸ்.பி விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதி வேகமாக பாயும் டெம்போக்கள்

குமரியில் கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் டாரஸ் லாரிகள் நவீன எமன்களாக மாறியுள்ள நிலையில், தற்போது குளங்களில் மண் எடுத்து செல்லும் டெம்போக்களும், 5 முதல் 6 டெம்போக்கள் என வரிசையாக அதி வேகத்தில் பறக்கின்றன.

குறிப்பாக அசம்பு சாலையில் புத்தேரி, இறச்சகுளம் சந்திப்பு, நாவல்காடு சந்திப்பு, தாழக்குடி சாலை என பல சாலைகளிலும், டெம்போக்கள் டாரஸ் லாரிகளுக்கே போட்டி தரும் வகையில் அதி வேகத்தில் செல்கின்றன. எனவே இவற்றின் வேகத்தை போலீசார் கட்டுப்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post 43 குளங்களில் இலவசமாக மண் அள்ள அனுமதி வீட்டு மனைகள், செங்கல் சூளைகளுக்கு விற்பனையா? appeared first on Dinakaran.

Related Stories: