சென்னை: நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகும் படம் ‘லைசென்ஸ்’. என்.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார். ராதாரவி, ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் உள்பட பலர் நடித்துள்ளனர். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு போராடும் ஒரு ஆசிரியையின் கதை. படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ராஜலட்சுமி பேசியதாவது:
நான் முதல் குழந்தை பெற்றபோது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு அனுபவம் இந்த படத்தில் நடித்தபோது கிடைத்தது. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்றபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை. இயக்குனர் என்னிடம் கூறும்போது இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸ் வைத்துள்ளேன். ஆனால் இந்த கதாநாயகி பாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று கூறியபோது அவர் என் மீது வைத்த நம்பிக்கையை கண்டு வியந்து போனேன். 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம்தான் என்றார்.
The post 32 வயதில் ஹீரோயின் ஆகியிருக்கிறேன்: பாடகி ராஜலட்சுமி நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.