தஹாத்- ஓடிடி விமர்சனம்

இந்தியில் வெளியாகும் கிரைம் திரில்லர் வெப்தொடர்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வரிசையில் வந்துள்ள தொடர் இது. கூடவே வடமாநிலங்களில் நிலவும் சாதிக்கொடுமைகள் குறித்தும், மதவெறி குறித்தும் பேசியிருக் கிறது. ஜெய்ப்பூர் அருகிலுள்ள புறநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக சோனாக்‌ஷி சின்ஹா பணியாற்றுகிறார். அவர் தாழ்ந்த சாதியில் பிறந்தவர் என்பதால் காவல்துறை வட்டாரத்திலும், பொதுவெளியிலும் அடிக்கடி சில அவமானங்களைச் சந்திக்கிறார். இந்நிலையில், அவரது காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 30 வயதை தாண்டிய திருமணமாகாத சில பெண்கள், பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறையில் சயனைட் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதை விசாரிக்கும்போது, அப்பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களில் இதுபோல் 28 பெண்கள் தற்கொலை செய்துகொண்ட விஷயம் தெரிகிறது. ஒரேமாதிரியாக சயனைட் அருந்தி இத்தனை பெண்கள் தற்கொலை செய்துகொண்டது ஏன்? அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது யார் என்பதை சோனாக்‌ஷி சின்ஹா எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது கதை. பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் என்ற ஒன்லைன் கதை, சுலபமான திரைக்கதையின் மூலமாகச் சொல்லப்படுகிறது.

கொலைக்கான வழிமுறைகளும், காரணங்களும் புதிது. 3வது எபிசோடிலேயே இவன்தான் கொலைகாரன் என்பதை அடையாளப்படுத்தி விடுகின்றனர். ஆனால், அந்த ஒற்றை ஆள் ஒட்டுமொத்த போலீசுக்கே எப்படி ஆட்டம் காட்டுகிறான் என்பது திரைக்கதை. தொடரின் நாயகனே சைக்கோ கொலைகாரனான குல்ஷன் டேவிஷ்தான். இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போன்ற அப்பாவி முகம், அதிர்ந்து பேசாத குரல். ஆனால், செய்கின்ற வேலைகள் எல்லாமே பக்கா கிரிமினல்.

திரையைவிட்டு வெளியே இழுத்து வைத்து அடிக்கலாமா என்ற வெறியை ஏற்படுத்துவது போன்ற நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கமர்ஷியல் ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹா, யதார்த்தமான கேரக்டரில் இதயங்களைக் கவர்கிறார். சாதி பற்றி பேசும்போது எல்லாம் அவர் முகத்தில் காட்டும் கோபம், குற்றவாளி தப்பிக்கும்போது அடையும் ஏமாற்றம் என்று, நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். கிரைம் திரில்லர் தொடராக மட்டுமின்றி, போலீசாரின் குடும்பப் பின்னணியையும் இயல்பாகப் பதிவு செய்துள்ளனர் ரீமா காதியும், ருச்சியா ஒபேரியும். 8 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

The post தஹாத்- ஓடிடி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: