தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும்: இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

‘தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும்’ என்று இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் இசை அமைக்க ஒப்பந்தமாவதற்கு முன்பு, ‘குட் நைட்’ படத்தின் திரைக்கதையை முழுமையாக வாசித்தேன். வாசிக்கும் பழக்கம் எனக்கு அதிகமாக உண்டு என்பதால் வாசித்தேன். இசை அமைப்பாளருக்கு எதற்காக முழு திரைக்கதை வடிவத்தை வழங்க வேண்டும் என்று சிலர் கேட்பார்கள். ஆனால், வாசிப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.

திறமையை கற்றுக்கொள்ளலாம் அல்லது வளர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படும். எனவே, தயாரிப்பாளருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல், முதலில் ஒரு இசை அமைப்பாளர் திரைக்கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அதில் அவருக்கு உடன்பாடு இருந்தால் மட்டுமே இசை அமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். சமீபத்தில் நான் வைரமுத்து எழுதிய ‘பாற்கடல்’ என்ற புத்தகத்தை வாசித்தேன்.

ஏன் ஒரு படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் ஒரே பாடலாசிரியர் எழுத வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அவர் தெளிவுபடுத்தி இருந்தார். தமிழகத்தில் எழுத்தாளர்களை இன்னும் கூடுதலாக கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். வலிமையான எழுத்துதான் ஒரு படத்தின் வெற்றிக்கு அச்சாணி. ‘குட் நைட்’ படம் எழுத்தின் மீது பலமாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும், அவர்களுக்கான பொருளாதார தேவையும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று கேட்கிறேன்’ என்றார்.

The post தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும்: இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: