சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பொன்னையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இது ஏழைகளுக்கான பட்ஜெட் கிடையாது. விமான நிலையம் திறப்பதாக சொல்கிறார்கள். அதில் எத்தனை கோடி பேர் பயணம் செய்வார்கள்? ஆனால் ரயில் பற்றி ஒரு வார்த்தையாவது இருக்கிறதா? தமிழ்நாட்டை பற்றி ஒரு வார்த்தையாவது இருக்கிறதா, கிடையாது. போன பட்ஜெட்டில் ஆந்திராவுக்கும், பீகாருக்கும் அள்ளி அள்ளி கொடுத்தீர்கள். ஏன் இந்தியா என்பது 2 மாநிலம் தானா? உங்களுக்கு ஆதரவு கொடுப்பதால் அந்த மாநிலத்துக்கு பணத்தை கொடுத்தீர்கள். தென்மாநிலத்துக்கு ஒன்றும் இல்லை.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. பீகாரில் 2025ம் ஆண்டு தேர்தல் நடக்கப்போகிறது. அதனால் பீகாருக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களில் இருந்தும் செலுத்துகின்ற குடிமகன்களின் வரியை எடுத்து பீகாருக்கு கொடுப்பது எந்தளவுக்கு நியாயம்? பாஜவில் இருந்து பணத்தை எடுத்து கொடுங்க. உங்க கட்சி (பாஜ) கணக்கில் ரூ.16 ஆயிரம் கோடி அக்கவுண்ட்ல இருக்கிறது. அதில் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி பீகாருக்கு வளர்ச்சி திட்டத்துக்கு கொடுங்க, அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லாததுதான் பெரியளவுக்கு ஏமாற்றம். இது ஏழைகளுக்கான பட்ஜெட் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து கொடுக்காமல் பாஜ பணத்தில் இருந்து பீகார் வளர்ச்சி திட்டத்துக்கு கொடுங்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் appeared first on Dinakaran.