சென்னை: தூத்துக்குடியில் முத்திரைத் திட்டங்கள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் (29.12.2024) தூத்துக்குடியில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள், முதலமைச்சரின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முத்திரைத் திட்டங்களான – உடன்குடியில் ரூ.13077 கோடி மதிப்பீட்டில் 1320 மெகாவாட் (2 x 660 MW) அனல்மின் நிலையப் பணிகள், ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்கும் பணிகளில், சாலை வசதி மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிவுற்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் தண்ணீர் விநியோகத்திற்கான பணிகள், ஓட்டப்பிடாரம் வட்டம், தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக பணியின் நிலை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியினை நீராதாரமாகக் கொண்டு ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை,
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.306 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை குறித்து முதலமைச்சர் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார். மேலும், இக்கூட்டத்தின்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் 2,75,307 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 15,262 மாணவர்களும்,
அரசு உதவி பெறும் பள்ளிகளில், நாளொன்றுக்கு சராசரியாக 16,363 மாணவர்களும், என மொத்தம் 31,625 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 3,381 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- பெற்று வருகின்றனர் என்றும், நாளை முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் 4680 மாணவிகளும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவர் என்றும், விடியல் பயணம் திட்டத்தின் கீழ், இதுவரை இந்த மாவட்டத்தில் உள்ள பெண்களால் 5.37 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும்,
சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டில் 16,793 சுய உதவி குழுக்களுக்கு 991.10 கோடி ரூபாய் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காகவும், அவர்கள் சுயமாக செயல்படவும், கடந்த 3 ஆண்டுகளில், 5.23 கோடி ரூபாய் மதிப்பிலான மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி, இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவிகள் போன்ற பல்வேறு உதவி உபகரணங்கள் 1571 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சரிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அதேபோன்று, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்றோர் விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் போன்ற பல்வேறு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் 47210 பயனாளிகளுக்கு மாத ஓய்வூதிய வழங்கப்பட்டு வருவதோடு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் 47,251 பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அதில் 1415 மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்டத்தில் 43 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல்வேறு நிறுவனங்களால் இதுவரை 4425 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சரிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள் இந்த ஆய்வு கூட்டத்தின் போது, முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய நாட்களில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் 592 தற்காலிக வெள்ள சீரமைப்பு பணிகள் ரூ.67.81 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது என்றும், 155 நிரந்தர வெள்ள சீரமைப்புப் பணிகள் முதலமைச்சரால் 27.02.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டு அவற்றில் தற்பொழுது 101 பணிகள் முடிவுற்று, மீதமுள்ள 54 பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்றும் முதலமைச்சரிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென்று முதலமைச்சர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மேலும், மாவட்டத்தில் உள்ள கள அலுவலர்கள் அரசால் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் யாவும் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் சுணக்கமின்றி உரிய வகையில் சிறப்பாக செயல்படுத்தப் படுகின்றவா என்பதை நேரடி கள ஆய்வுகள் மூலம் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். அரசுத் துறைகள் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளும் விண்ணப்பம் பெறப்பட்டவுடன் உரிய காலத்தில் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எல். மதுபாலன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தூத்துக்குடியில் முத்திரைத் திட்டங்கள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.