இங்கு ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு மின்சார வயர்களில் எரிந்து புகை வெளியாகியுள்ளது. இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை நோயாளிகள், ஆண்கள் பெண்கள் பிரிவு உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரம் செல்ல செல்ல மின் வயர்களில் இருந்து வெளியாகிய புகையின் அளவு அதிகரித்தால் இரண்டாவது தளம் முழுவதும் கரும்பு புகை சூழ தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இரண்டாவது தளத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு புகை சூழந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் டார்ச் லைட் மற்றும் அவசர விளக்குகளை பயன்படுத்தி இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சர் பயன்படுத்தியும், தூக்கி கொண்டும் முதல் தளத்துக்கு அழைத்து வந்தனர். இதில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த ஒரு சில நோயாளிகளுக்கு முதல் தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீ பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும் மின் கசிவுக்கான காரணம் குறித்து சோதனை செய்து வருகின்றனர். இதனிடையே ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறை மற்றும் நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ள அறைகளை பார்வையிட்டு நோயாளிகளின் உறவினர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தனர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரண்டாவது தளம் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டதால் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து: உயிரிழப்பு இல்லை என தகவல்! appeared first on Dinakaran.