இதுகுறித்து ஆய்வாளர்களான டாக்டர்கள் ஹீமோக்ளோப்ளின், பத்ரி நாராயணன் கூநுகையில், புல்வெளிக் கழுகுகள் கிழக்கு ருமேனியாவிலிருந்து தெற்கு உருசியா வரையிலும், மத்திய ஆசியாவின் புல்வெளிகள் முதல் மங்கோலியா வரையிலும் என இப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் வசிக்கும் பறவைகள், அவற்றின் குளிர்காலத்தை ஆப்பிரிக்கா, இந்தியாவில் கழிக்கின்றன. சில ஆண்டுகள் முன்பு சென்னை, திருநெல்வேலி பகுதிகளில் புல்வெளிக் கழுகு ஆவணம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க புல்வெளிக் கழுகுகளின் எண்னிக்கை குறைந்து வருகிறது.
அழிவு தொடும் உயிரினங்களை இயற்கை பாதுகாப்புச் சங்கம் (ஐயுசிஎன்) செம் பட்டியல் வகைப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றது. புல்வெளிக் கழுகினம் அருகி வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றனர். மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை நிர்வாகி தமிழ்தாசன் கூறுகையில், ‘‘குஜராத்தில் உள்ள பண்ணை புல்வெளிகளும், ராஜஸ்தான் பகுதி பாலைவன புல்வெளிகளும் பல்லுயிரிய நோக்கில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, பராமரிக்கப்படுகின்றன. புல்வெளிகளின் பண்பாட்டு பொருளியல் மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் குறித்த சிந்தனை போக்குகள் தமிழ்நாட்டில் மேலும் வளர்ச்சியடைய வேண்டும்.
பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வறல் புல்வெளிகள் தரிசு அல்லது புறம்போக்கு என்றே அரசு ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மறுவரையரை செய்ய வேண்டும். மதுரையில் திருமங்கலம், தோப்பூர், சிவரக்கோட்டை, பேரையூர் பகுதிகளில் காணப்படும் வறல் புல்வெளிகள் பல்லுயிரிய பெருக்கமுள்ள பகுதிகளாகும். மதுரை மாவட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கள்ளிக்குடி ஒன்றிய பகுதியில் உள்ள வறல் புல்வெளிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய நரி, புள்ளிமான், வெருகு, உடும்பு உள்ளிட்ட காட்டு விலங்குகளின் புகலிடமாகவும் புல்வெளிகள் விளங்குகின்றன. இவ்வாறு தெரிவித்தார்.
The post மத்திய ஆசியா, மங்கோலியாவில் வசிக்கும் அரிய வகை புல்வெளி கழுகு கள்ளிக்குடியில் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.