நேற்று பனிமூட்டம், கடுங்குளிர் நிலவியபோதிலும் சுற்றுலா பயணிகள் குணா குகை, பைன் மரக்காடு, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை அழகை ரசித்தனர். பிரையண்ட் பூங்காவிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், லாட்ஜ் மற்றும் ரெசார்ட்டுகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. நேற்று முன்தினம் இரவு பல்வேறு ஓட்டல்கள், ரெசார்ட்டுகள் மற்றும் காட்டேஜ்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு ெகாண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, ஆங்கில புத்தாண்டு விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. பஸ், வேன், கார் மற்றும் டூவீலர்களில் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பணிகள், ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தனர். இங்குள்ள பறவைகள் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு பூங்கா, வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் குடும்பத்துடன் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் அதிகளவு தண்ணீர் கொட்டியதால் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை லேசான வெயில் தென்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை முதல் மெயினருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் குளிக்க தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. புத்தாண்டு விடுமுறை மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் நேற்று குற்றாலத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல திருச்செந்தூர், பழநி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கீழை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் 2024ம் ஆண்டு நிறைவுற்றதற்கு நன்றி அறிவிப்பு பிரார்த்தனையும், 2025-ம் ஆண்டை வரவேற்கும் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் தஞ்சை மறைமாவட்ட ஆயர், திருப்பலி மேடையில் வைத்திருந்த திருவிளக்கை ஏற்றி புத்தாண்டு பிறப்பை அறிவித்தார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது.
The post புத்தாண்டை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள் கூட்டம்: கோயில்கள், தேவாலயங்களில் பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.