மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியதால் 57 ஏரிகளுக்கு உபரி நீர் திறப்பு: அமைச்சர், எம்.பி., பங்கேற்பு

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நிரம்பிய பிறகு உபரிநீரை கொண்டு சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் 2019ல் ரூ.565 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2020 பிப்ரவரியில் சோதனை ஓட்டம் மூலம் காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. நிலம் கையகப்படுத்த ஏற்பட்ட கூடுதல் செலவு, மின் இணைப்பு, மின் கட்டண செலவு மற்றும் வடிவமைப்பு மாற்றம் காரணமாக 2023ம் ஆண்டு ஏப்ரலில் ரூ.673 கோடியாக திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

தொடக்கத்தில் 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டாலும், பல ஏரிகள் தனியார் பட்டாவாக இருந்ததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால், இத்திட்டத்தில் 82 ஏரிகள் மட்டுமே சேர்க்கப்பட்டது. தற்போது, 57 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை தண்ணீர் திறக்கப்பட்டபோது 55 ஏரிகள் நிரம்பின. தற்போது, 2 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், 5 ஏரிகளில் தற்போது 75 சதவீத தண்ணீர் மட்டுமே உள்ளது.

அந்த ஏரிகளையும் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 0.60 டி.எம்.சி. மட்டுமே தேவைப்படும். திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து காளிப்பட்டி, நங்கவள்ளி ஏரிகளுக்கு தனித்தனியே ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு உபரிநீர் கொண்டு செல்லப்படுகிறது. நங்கவள்ளி ஏரி வழியாக செல்லும் உபரிநீர் வேம்பனேரிக்கு செல்கிறது. அந்த ஏரி நிரம்பியதும், மீண்டும் மேட்டூர் அணையின் கிழக்கு கரை கால்வாயில் கலக்கிறது. காளிப்பட்டி ஏரி வழியாக கொண்டு செல்லப்படும் உபரிநீர், தேவூர் பகுதியில் மீண்டும் காவிரியில் கலக்கிறது.

நேற்று மாலை, திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து, மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், செல்வகணபதி எம்.பி., கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் சதாசிவம் எம்எல்ஏ ஆகியோர் மின் விசையை இயக்கி திறந்து விட்டனர். அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ‘கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என கருதி கைவிடாமல், அனைத்து தரப்பு மக்களுக்குமான முதல்வர் என்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்’ என்றார்.

* அதிகாரிகள் கண்காணிப்பு
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் கூடுதலாக வரும் தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் உபநதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் திடீரென மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக நீரை வெளியேற்ற 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நீர்வளத்துறை பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 2,875 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1791 கன அடியானது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியதால் 57 ஏரிகளுக்கு உபரி நீர் திறப்பு: அமைச்சர், எம்.பி., பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: