விபத்து மற்றும் தீக்காயங்களால் ஏராளமான நோயாளிகளுக்கு உடல் உறுப்பின் தேவையும் அதிகம் ஏற்படுகிறது. ஆனால், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2008ல் முன்னாள் முதல்வர் கலைஞரால் உடல் உறுப்பு தான திட்டம் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2015ல் பெயர் மாற்றப்பட்டு, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையமாக செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ஒப்புதலோடு மூளைச்சாவு அடைந்தோரின் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு அவர்கள் மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 செப்டம்பர் 23ம் தேதி உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இதுவரை உடல் உறுப்பு தானம் செய்த 326 நபர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2024ல் மட்டும் 266 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்ததில், 1,484 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் 853, சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் 631 ஆகும். சிறுநீரகம் 452, கல்லீரல் 208, இருதயம் 94, நுரையீரல் 87 ஆகிய மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நன்கொடையாளர்கள் 178 பேர் வழங்கிய உடல் உறுப்புகள் மூலம், 1000 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2,053 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதிலிருந்து தற்போது வரை, மொத்தம் 12 ஆயிரத்து 104 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 14 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். இருப்பினும் சிறுநீரகத்திற்காக 7,257 பேரும், கல்லீரல் 505, நுரையீரல் 57, இதயம் 69, கை மாற்று அறுவை சிகிச்சைக்காக 23 பேர் காத்திருக்கின்றனர். 6 பேருக்கு நுரையீரல் மற்றும் இதயமும், 3 பேருக்கு கணையமும் தேவைப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2021 வரை 14 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.
சுகாதாரத்துறையின் தீவிர நடவடிக்கையால், தற்போது அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லாத உறுப்பு மீட்பு மைய உரிமங்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் உள்ள 39 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும் மூளைச்சாவு கமிட்டி அமைக்கப்பட்டு பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post கடந்தாண்டில் மட்டும் தமிழகத்தில் 266 பேர் உடல் உறுப்பு தானம் appeared first on Dinakaran.