மகாராஷ்டிராவில் இருந்து திருப்பூருக்கு வெங்காய வரத்து அதிகரிப்பு

*விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் : திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.

அதன் பிறகு தினசரி சந்தையில் வியாபாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரும் காய்கறிகள், தக்காளி, வெங்காயம், பூண்டு, தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பொங்கலூர் அவிநாசிபாளையம் தாராபுரம் குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

அதுமட்டுமல்லாது கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் அதிகளவு வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக அங்கிருந்து திருப்பூருக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைவாக இருந்தது.

இதன் காரணமாக பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அப்பகுதிகளில் மழை குறைந்து இயல்புநிலை திரும்பி உள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது.

தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வெங்காய விளைச்சல் அமோகமாக இருப்பதன் காரணமாக அங்கிருந்து நாடு முழுவதும் லாரிகளில் வெங்காயம் அனுப்பப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இருந்து நேற்றைய தினம் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு 5க்கும் மேற்பட்ட லாரிகளில் 100 டன் அளவிற்கும் அதிகமான பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டிருந்தது.

ஏற்கனவே வரத்து அதிகரித்ததன் காரணமாக விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்த வெங்காயம் மண்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காரணமாக புதிதாக கொண்டுவரப்பட்ட வெங்காயம் தென்னம்பாளையம் அடுத்த ஏபிடி சாலையில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தது. மண்டிகளில் வெங்காயம் விற்பனை ஆனவுடன் உடனுக்குடன் லாரிகளில் கொண்டுவரப்பட்ட வெங்காயம் இறக்கி வைக்கப்படும் என லாரி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

வெங்காயம் வரத்து குறித்து வெங்காய மண்டி உரிமையாளர் கூறுகையில், ‘‘திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இயல்பு நிலை நீடிப்பதன் காரணமாக வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வழக்கத்தைவிட வெங்காயம் விலை குறைந்து வரத்து அதிகரித்துள்ளது.

பெரிய வெங்காயம் வகைக்கு ஏற்றவாறு மொத்த விற்பனையில் 25 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் 3 கிலோ 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஏராளமானோர் மொத்தமாக வாங்கிச் சென்று குடியிருப்பு பகுதிகளுக்குள் சரக்கு வாகனங்களில் வைத்து விற்பனை செய்கின்றனர். வெங்காயம் விலை குறைந்திருப்பதன் காரணமாக விசேஷங்களுக்கும், அன்னதானம் போன்ற நிகழ்வுகளுக்கும் மண்டிகளிலேயே பொதுமக்கள் நேரடியாக வாங்கி செல்கின்றனர். இன்னும் ஓரிரு வாரம் இதே நிலை நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.

The post மகாராஷ்டிராவில் இருந்து திருப்பூருக்கு வெங்காய வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: