வானூர் : வானூர் அருகே போலீஸ் தடையை மீறி சுடுகாட்டில் பெண் சடலத்தை கிராம மக்கள் அடக்கம் செய்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பாட்டானூர், ஸ்ரீராம் நகர், மாட்டுக்காரஞ்சாவடி பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாட்டுக்காரன் சாவடியில் சுடுகாடு உள்ளது. இந்நிலையில் பட்டனூரை சேர்ந்த ராஜாராம் என்பவருடைய மனைவி ஜெயலட்சுமி (74) என்பவர் நேற்று காலை மரணமடைந்தார். இவரது சடலத்தை மாட்டுக்கார சாவடி சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக பட்டானூரிலிருந்து மாட்டுக்காரஞ்சாவடி சுடுகாடுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அப்போது ஆரோவில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் சாவு இறுதி ஊர்வலத்தை நிறுத்தினர். மாட்டுக்காரன் சாவடியில் உள்ள சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யவும் எரிக்கவோ கூடாது என அத்தி வனம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருப்பதாகவும், ஆகையால் நாவற்குளம் சுடுகாட்டில் அடக்கம் செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கோட்டகுப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி. வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி. வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் போலீசாரின் தடையை மீறி பொதுமக்கள், ஜெயலட்சுமியின் சடலத்தை ஊர்வலமாக எடுத்து சென்று மாட்டுக்கார சாவடி சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் மாட்டுக்காரஞ்சாவடி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
The post போலீஸ் தடையை மீறி பெண் சடலத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்த கிராம மக்கள் appeared first on Dinakaran.