மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன்(26). இவர் கடந்த 7ம் தேதி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் விசாரணையின்போது உயிரிழந்தார். சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது பணியில் இருந்த போலீசார், ஆகாஷை விசாரணை செய்த போலீசார் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். மானாமதுரை டிஎஸ்பி ராஜா, திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன், மானாமதுரை இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், எஸ்.ஐ குகன், ஏட்டு தெய்வேந்திரன், போலீசார் இருளப்பன், காளீஸ்வரன், மகேந்திரன், முத்துப்பாண்டி, மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு எஸ்ஐ முத்துராஜ், ஏட்டு முனீஸ்குமார் ஆகிய 11 பேருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இவர்களில் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்.ஐ குகன் போலீசார் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு விஏஒ மூலம் நேரில் சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். இவர்களை தவிர திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட மானாமதுரை இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், மானாமதுரை தனிப்பிரிவு ஏட்டு முனீஸ்குமாருக்கு சம்மன் வழங்கவும் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக, ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன், தாய் ஆனந்தி ஆகியோரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதில் ஆகாஷ் எங்கு, எப்படி கைது செய்யப்பட்டார்? அதன் பின்னர் என்ன நடந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்டனர். ஆகாஷின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணை நேற்று மாலை நிறைவடைந்தது.
