உடல் அடையாளங்கள் மீது இன்னும் எத்தனை ஆண்டுகள் அரசியல் செய்வீர்?ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு திருநர் மசோதா எதிர்ப்பு போராட்டக்குழு கேள்வி

 

சென்னை: மார்ச் 13ம் தேதி ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் வீரேந்திர குமார் மக்களவையில் திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி தமிழ்நாடு திருநர் மசோதா எதிர்ப்பு போராட்டக் குழு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மீறுகிறது.

மேலும் இது திருநர் உரிமைகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இரண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பான தேசிய சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் இந்திய யூனியன் (2014) தீர்ப்புக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார தரநிலைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாகும்.

திருநர் சமூகத்திற்கு நல உரிமைகளை வழங்குவதற்கு பதிலாக, எங்கள் உடல் அடையாளங்கள் மீது இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் அரசியல் செய்வீர்கள்? திருநர் சமூகத்தின் அரை நூற்றாண்டு கால கோரிக்கைகளான, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைமட்ட ஒதுக்கீடு, வயது தளர்வு மற்றும் மதிப்பெண் தளர்வு, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளுக்கான அணுகல் எளிமையாக்கல், வீட்டு வசதித் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து, தரமான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவைகள், ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.

திருநர் உரிமை திருத்த மசோதா 2026-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பாலின சுய அடையாள உரிமையை அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்க வேண்டும். எதிர்காலத்தில் சட்டம் அல்லது அரசுத் துறைகள் எடுக்கும் முன்னெடுப்புகளில் திருநங்கை, கோத்தி, திருநம்பி. இடைப்பாலினர் மற்றும் பாலின பன்முகத்தன்மை கொண்ட அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டும்.

வீட்டை விட்டு வெளியேற்றப்படும் திருநர் சமூகத்திற்கு எந்த விதமான ஆதரவும் வழங்கப்படாமல் சொந்த திருநர் சமூகத்தையே குற்றவாளியாக திணிக்க நினைக்கும் இது போன்ற எந்த மசோதாக்களையும் எதிர்வரும் காலங்களில்கூட கொண்டு வர அரசு நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது.இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: