* டிச.5ம் தேதி ஒரே நாளில் ரூ238.15 கோடி வருவாய்
சென்னை: இதுவரையில் இல்லாத வகையில் இந்தாண்டு நவம்பர் மாதத்தில் ரூ1984.02 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது. டிச.5ம் தேதி ஒரே நாளில் ரூ238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 2024 நவம்பர் மாதத்தில் ரூ1984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த வருடம் நவம்பர் மாதம் அடைந்த வருவாயுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த நவம்பர் 2024ம் மாதத்தில் கூடுதலாக ரூ301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த டிச.5ம் தேதி அன்று கார்த்திகை மாத சுப முகூர்த்தநாளில் ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு வில்லைகள் 100 லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளை பயன்படுத்தி கடந்த டிச.5ம் தேதி அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
The post இதுவரையில் இல்லாத வகையில் இந்தாண்டு நவம்பரில் ரூ1984.02 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.