நெல்லை தீயணைப்புத்துறை ஆபீசில் லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம் அதிகாரியை சிக்க வைக்க பணம் வைத்த வாலிபர் மும்பையில் கைது: கூலியாக ரூ.40 ஆயிரம் பெற்றது அம்பலம்

 

நெல்லை: நெல்லை மண்டல தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.2,25,400 பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக துணை இயக்குநர் சரவணபாபு மற்றும் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு முன் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து, கையில் பையுடன் துணை இயக்குநர் அலுவலகத்திற்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, துணை இயக்குநர் சரவணபாபு, அதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமாணியிடம் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் நெல்லை மாநகர துணை கமிஷனர் வினோத் சந்தாராம் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஆனந்த் (30) என்பவருக்கு சதியில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆனந்த் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் வல்லநாடு உழக்குடியைச் சேர்ந்த முத்துச்சுடலை ஆகியோரை போலீசார் கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்தனர். கைதான தீயணைப்பு வீரர் ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. அலுவலகத்தில் பணத்தை வைத்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த விஜய் என்பவரை மும்பை தாராவியில் போலீசார் கைது செய்து நேற்று நெல்லைக்கு அழைத்து வந்தனர்.

விஜயிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் துணை இயக்குநர் அலுவலகத்தில் பணத்தை வைப்பதற்காக அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பேரம் பேசப்பட்டு, 40 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனிடையே கைதான தீயணைப்பு வீரர் ஆனந்தை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: